Last Updated : 20 Jan, 2018 10:26 AM

 

Published : 20 Jan 2018 10:26 AM
Last Updated : 20 Jan 2018 10:26 AM

அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரி வினாத்தாள்: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு மே மாதத்தில் ‘நீட்’ தேர்வு: கடும் கட்டுப்பாடுகள் தொடரும் என சிபிஎஸ்இ தகவல்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக் கான ‘நீட்’ தேர்வு, வரும் மே மாதம் நடக்கிறது. அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும் என்றும் மாணவர்கள் கடும் சோதனைக்கு பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்றும் சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்களும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிடிஎஸ் இடங்களும் உள்ளன. மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, வரும் மே மாதம் நடக்க உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் ஓரிரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பெற மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறியதாவது:

‘நீட்’ தேர்வு தொடர்பான அறிவிப்பை www.cbseneet.nic.in, www.cbse.nic.in என்ற இணையதளத்தில் ஓரிரு வாரத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.

10 மொழிகளில் தேர்வு

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாம், வங்காளம் ஆகிய 10 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படும். தேவைப்பட்டால் இன்னும் கூடுதல் மொழிகளில் தேர்வு நடத்தப்படும். கடந்த ஆண்டு தேர்வில் ஒவ்வொரு மொழியிலும் வினாத்தாள் மாறி இருந்ததாக பல தரப்பிடம் இருந்து புகார்கள் எழுந்தன. இந்த ஆண்டு அதுபோல் நடக்காது.

கடும் சோதனை

அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் இடம்பெறும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு தேர்வு எழுத வந்த மாணவர்களிடம் சோதனை நடத்தப்பட்டதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்கள் தேர்வில் முறைகேடில் ஈடுபடுவதைத் தடுக்கவே சோதனை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு கண்டிப்பாக இருக்கும். தங்க நகைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் எதுவும் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படாது. கடும் சோதனைக்குப் பின்னரே மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றனர்.

கடந்த ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து 4,97,043 மாணவர்கள், 6,41,839 மாணவிகள், 8 திருநங்கைகள் என மொத்தம் 11,38,890 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதில் 4,73,305 மாணவர்கள், 6,16,772 மாணவிகள், 8 திருநங்கைகள் என 10,90,085 பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் மட்டும் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 88,478 மாணவ, மாணவிகளில் 95 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு எழுதியவர்களில் 2,66,221 மாணவர்கள், 3,45,313 மாணவிகள், 5 திருநங்கைகள் என மொத்தம் 6,11,539 பேர் (56.1 சதவீதம்) எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு தகுதி பெற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த யாரும் முதல் 25 இடங்களுக்கான பட்டியலில் இடம் பெறவில்லை.

தமிழகத்தில் எதிர்ப்பு

‘நீட்’ தேர்வுக்கு தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும்படி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, திடீரென தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x