Published : 29 Jan 2018 09:56 AM
Last Updated : 29 Jan 2018 09:56 AM

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மறியல் போராட்டம்: அனைத்து கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்

தமிழகம் முழுவதும் திட்டமிட்டப்படி இன்று (ஜன.29) மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நேற்று முன்தினம் திமுக தலைமையில் தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. அதன் தொடர்ச்சியாக நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

அதில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பொருளாளர் கணேசமூர்த்தி, விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: தமிழக அரசு போக்குவரத்துக் கட்டணத்தை வரலாறு காணாத அளவில் உயர்த்தியது. இது ஏற்கெனவே நெருக்கடியில் இருக்கும் ஏழை, எளிய, மக்கள் தலையில் பேரிடியாக விழுந்தது. மக்களின் துயரத்தை கணக்கில் கொண்டு உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராடின. போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சியினர், அமைப்பினர்களுக்கு எதிராக கடும் அடக்குமுறையை அரசு ஏவியது. நூற்றுக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் சிறையில் உள்ளனர்.

கட்டண உயர்வை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று ஆணவமாக அரசு செயல்பட்டது. இத்தனையையும் மீறி போராடிய அனைவரையும் இந்தக் கூட்டம் பாராட்டுகிறது. இப்போது அரசு, கட்டண உயர்வில் சிறு குறைப்பை செய்திருக்கிறது. இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே உள்ளது. மக்களின் சுமை குறையும் சூழ்நிலை ஏற்படவில்லை.

எனவே, தமிழக அரசு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். அத்துடன், சிறையில் அடைக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும், அவ்வப்போது தேவைப்படும்போதெல்லாம் கட்டணத்தை அதிகாரிகளே உயர்த்திக் கொள்வார்கள் என்ற அறிவிப்பும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை கைவிட வேண்டும்.

இந்நிலையில், ஜனவரி 29-ம் தேதி (இன்று) மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய தலைநகரங்கள்தோறும் மறியல் போராட்டத்தை நடத்தி கோரிக்கையை வலியுறுத்துவது என்று தீர்மானிக்கிறது. அத்துடன், இந்த மறியல் போராட்டத்தில், ஆயிரக்கணக்கில் அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றிடவும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கண்துடைப்பு நாடகம்

கூட்டத்துக்குப் பிறகு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள், பொதுமக்கள் நடத்திய போராட்டங்கள் காரணமாகவும் திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் ஒருங்கிணைந்து நடத்திய போராட்டங்களின் காரணமாகவும் கட்டணத்தை குறைத்திருப்பதாக தமிழக அரசு கண் துடைப்பு நாடகம் நடத்தி இருக்கிறது.

ஆனால், பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அதற்காக நாளை (இன்று) மறியல் போராட்டம் நடத்தி வலியுறுத்த இருக்கிறோம். அதன்பிறகு, அரசின் நிலைப்பாட்டை அறிந்த பிறகு, மீண்டும் அனைத்து கட்சிகளின் கூட்டம் கூட்டப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x