பாத்திமா பீவி மறைவு முதல் கனமழை எச்சரிக்கை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ நவ.23, 2023

பாத்திமா பீவி மறைவு முதல் கனமழை எச்சரிக்கை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ நவ.23, 2023
Updated on
2 min read

தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவு: தமிழக முன்னாள் ஆளுநரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான எம்.பாத்திமா பீவி வியாழக்கிழமை உடல்நலக் குறைவால் காலமானார். கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. அவருக்கு வயது 96.

மறைந்த பாத்திமா பீவி, உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி ஆவார். தமிழக ஆளுநராகவும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராகவும் அவர் செயலாற்றியவர் என்பது நினைவுகூரத்தக்கது.

பாத்திமா பீவிக்கு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் புகழஞ்சலி: “பொதுச் சேவையில் தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “உச்ச நீதிமன்ற நீதிபதி, தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர், கேரள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர், தமிழக ஆளுநர் எனப் பல உயர் பொறுப்புகளில் சிறந்து பணியாற்றியவர்” என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதேபோல், கூட்டாட்சி கோட்பாடுகளுக்கும், மாநில மக்கள் உரிமைகளுக்கும் முன்னுரிமை கொடுத்த பெருமைக்குரியவர்; அனுபவம் வாய்ந்த நீதியரசர், அரசியல் விற்பன்னர்; உச்ச நீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதியாக பதவியேற்றவர்; சிறுபான்மை சமூகத்தில் பெண்ணாக பிறந்து நீதித் துறையிலும், ஆளுநராக நிர்வாகத் துறையிலும் சிறந்து விளங்கியவர் என்றெல்லாம் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவிக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

உத்தராகண்ட் மீட்புப் பணி நிலவரம் என்ன?: உத்தராகண்ட் சுரங்கப் பாதைக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், “நாங்கள் கதவின் முன்னால் நிற்கிறோம். விரைவில் மீட்பு பணிகள் முடிவுக்கு வரும்” என்று சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் வியாழக்கிழமை மாலை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு உடனடியாக மருத்து உதவிகள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: “அடுத்த 24 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘விவசாயிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்திடுக’: “மேல்மா சிப்காட் நில எடுப்பு எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்று, சிறையில் உள்ள அனைத்து விவசாயிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். நில எடுப்பு நடவடிக்கை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, விவசாயிகளின் பிரதிநிதிகளிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

“குஷ்பு பொது மன்னிப்புக் கேட்க வேண்டும்” - தமிழக காங்கிரஸ்: “குஷ்புவின் தரக்குறைவான பேச்சால் பட்டியலின மக்கள் மனது புண்பட்டுப் போயிருக்கிறது. தமது தவறை திருத்திக் கொண்டு அந்தப் பதிவை உடனடியாக குஷ்பு நீக்க வேண்டும். அதோடு அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், லட்சக்கணக்கான பட்டியலின மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பட்டியலினப் பிரிவுத் தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் கூறியுள்ளார்.

டீப்ஃபேக் ஆக்கங்களுக்கு அபராதம்: மத்திய அரசு யோசனை: “ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தலாக டீப்ஃபேக் (DeepFake) உருவெடுத்துள்ளது. அவ்வாறான போலிகளை உருவாக்குவோருக்கும், அவை பகிரப்படும் தளங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுவது குறித்தும் யோசித்து வருகிறோம்" என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுடன் அவர் ஆலோசனை நடத்தியபோது இதனை தெரிவித்தார்.

விஜயேந்திரா நியமனம்: பாஜக மூத்த தலைவர்கள் அதிருப்தி: கர்நாடக பாஜக தலைவராக விஜயேந்திராவையும், எதிர்க்கட்சி தலைவராக ஆர்.அசோகாவையும் தேர்ந்தெடுத்ததற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பகிரங்கமாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, கர்நாடக மாநில பாஜக தலைவராக எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நியமிக்கப்பட்டது நியாயமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை தகவல்: “தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

காவல் நிலையத்தில் ஆஜரான மன்சூர் அலிகான்: சென்னை - ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்காக வியாழக்கிழமை ஆஜரானார். விசாரணை முடித்து வெளியே வந்தவர், “த்ரிஷாவை நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. ஒரு நடிகையாக அவரை மதிக்கிறேன் என காவல் துறையிடம் சொன்னேன்” என்றார். இதனிடையே, அவரது முன்ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in