

சென்னை: தமிழக முன்னாள் ஆளுநரும், உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதியுமான எம்.பாத்திமா பீவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 96. அவரது மறைவுக்கு தமிழக ஆளுநர், முதல்வர், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: தமிழக முன்னாள் ஆளுநர் நீதிபதி எம். பாத்திமா பீவியின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. பொதுச் சேவையில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். இந்த துயரமான நேரத்தில், அவரை பிரிந்துவாடும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்
தமிழக முதல்வர் ஸ்டாலின்: தமிழக முன்னாள் ஆளுநரும், உச்ச நீதிமன்ற நீதிபதியான முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவருமான பாத்திமா பீவி மறைந்தார் என்றறிந்து வருந்துகிறேன். உச்ச நீதிமன்ற நீதிபதி, தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர், கேரள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர், தமிழக ஆளுநர் எனப் பல உயர் பொறுப்புகளில் பணியாற்றியுள்ள பாத்திமா பீவி மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: இந்திய உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி என்ற சிறப்புக்குரிய பாத்திமா பீவி, சட்டப் படிப்பில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர். தேசிய மனித உரிமைக் கமிஷன் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்றவர்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: 1997 முதல் 2001 கால கட்டத்தில் தமிழகத்தின் ஆளுநராக சிறப்பாக செயல்பட்டவர். 1998-ம் ஆண்டில் கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது அரசுடன் இணைந்து நின்று அமைதிப்படுத்தும் பணிக்கு தீவிரமாக உதவியவர். கூட்டாட்சி கோட்பாடுகளுக்கும், மாநில மக்கள் உரிமைகளுக்கும் முன்னுரிமை கொடுத்த பெருமைக்குரியவர். நாட்டின் ஜனநாயக வாழ்வு நெருக்கடிக்கும், நீதிபரிபாலன முறை ஆபத்துக்கும் ஆளாகியுள்ள நேரத்தில் அனுபவம் வாய்ந்த நீதியரசர், அரசியல் விற்பன்னர் எம்.பாத்திமா பீவி மறைவு பேரிழப்பாகும்.
காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை: மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதியாக பதவியேற்றவர். சிறுபான்மை சமூகத்தில் பெண்ணாக பிறந்து நீதித் துறையிலும், ஆளுநராக நிர்வாகத் துறையிலும் சிறந்து விளங்கியவர்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தின் போது தமிழகத்தின் ஆளுநராக பதவி வகித்த பாத்தீமா பீவி, அரசுடன் இணக்கமாக செயல்பட்டு தமிழக மக்களின் நலனுக்கான கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றினார். நீதித் துறையின் உயர்மட்ட பதவிகளில் பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க தொடர்ந்து போராடி, சமத்துவமிக்க நீதியின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த பாத்திமா பீவி ஆற்றிய பணிகள் இந்திய நீதித்துறை வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
வாழ்க்கைக் குறிப்பு: 1927-ம் ஆண்டு கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிறந்த பாத்திமா பீவி, திருவனந்தபுரத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் வேதியியலில் பட்டப்படிப்பை முடித்தார், பின்னர் அரசு சட்டக் கல்லூரியில் எல்எல்பி படித்தார். தங்கப் பதக்கம் வென்ற அவர், மாவட்ட நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீதித்துறை சேவையில் மாஜிஸ்திரேட்டாக சேர்ந்தார்.
1974-ல் மாவட்ட அமர்வு நீதிபதியாக பதவியேற்ற அவர், 1983-ல் கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1989-இல், அவர் உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். கடந்த 1997-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை, தமிழக ஆளுநராக இருந்தார். கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது அவரது உயிர் பிரிந்தது.