Published : 23 Nov 2023 02:41 PM
Last Updated : 23 Nov 2023 02:41 PM

“குஷ்பு பொது மன்னிப்புக் கேட்க வேண்டும்” - தமிழ்நாடு காங்கிரஸ் எச்சரிக்கை

ரஞ்சன்குமார் (இடது), குஷ்பூ (வலது)

சென்னை: "குஷ்புவின் தரக்குறைவான பேச்சால் பட்டியலின மக்கள் மனது புண்பட்டுப் போயிருக்கிறது. தமது தவறை திருத்திக் கொண்டு அந்தப் பதிவை உடனடியாக குஷ்பு நீக்க வேண்டும். அதோடு அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், லட்சக்கணக்கான பட்டியலின மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பட்டியலினப் பிரிவுத் தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா குறித்து அவருடன் லியோ படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் அநாகரிகமான கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் தேசிய மகளிர் ஆணையமும் தனது எதிர்ப்பை தெரிவித்தன. இந்நிலையில், எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் இணையவாசி ஒருவர் குஷ்புவிடம் சரமாரியாக கேள்வி கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதில் எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்த குஷ்பு, ‘திமுக குண்டர்கள் இப்படித்தான் தவறான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இதுதான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும், மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார்.

சேரி மொழி என்று பேசி பட்டியலின மக்களை நேரடியாக குஷ்பு அவமதித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியினருக்கே உரித்தான சாதிய மனோபாவத்தை விஷமாக கக்கியிருக்கிறார் குஷ்பு. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற எலும்புத்துண்டுக்காக எப்படி வேண்டுமானால் பேசலாம் என்று நினைக்கிறாரா குஷ்பு. நீட் தேர்வால் அனிதா தற்கொலை செய்து கொண்ட போது இந்த குஷ்பு எங்கே போயிருந்தார்? பாஜகவின் கே.டி.ராகவன் என்ற தலைவர் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக பேசிய போது இந்த குஷ்பு எங்கே போயிருந்தார்? பாஜகவில் மகளிர் நிர்வாகிகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளானபோது இந்த குஷ்பு எங்கே போயிருந்தார்? மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட போது இந்த குஷ்பு எங்கே போயிருந்தார்?

குஷ்புவுக்கு மகளிர் நலன் மீது எல்லாம் சிறிதளவும் அக்கறை கிடையாது. தன் பதவியை தக்க வைக்க வேண்டும் என்பது தான் குஷ்புவின் நோக்கம். சேரி மக்களிடம் ஓட்டு கேட்கும் போது மட்டும் இனித்ததா? மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்த பிறகும் கூட தன் தவறுக்கு மன்னிப்பு கேட்காமல், பூசி மொழுகும் வேலையை செய்ய தொடங்கியிருக்கிறார். சேரி என்ற வார்த்தைக்கு பிரெஞ்ச் மொழியில் அன்பு என்று அர்த்தமாம். அதை தான் பயன்படுத்தினாராம். திமுக ஆதரவாளர் ஒருவரின் எக்ஸ் தள பதிவுக்கு பதில் அளித்த குஷ்பு, சேரி மொழி என்று அப்பட்டமாக திட்டினார். அதோடு முதல்வரை சுற்றி இதுபோன்ற முட்டாள்கள் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். இதுதான் அன்பை வெளிப்படுத்தும் சொல்லா? யாரை ஏமாற்ற குஷ்பு கபட நாடகமாடுகிறார்? இப்போது கூட தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவருக்கு தோன்றவில்லை.

சேரி மொழி என்று சொல்லி பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் அளவுக்கு குஷ்புவுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? குஷ்புவின் தரக்குறைவான பேச்சால் பட்டியலின மக்கள் மனது புண்பட்டுப் போயிருக்கிறது. தமது தவறை திருத்திக் கொண்டு அந்தப் பதிவை உடனடியாக குஷ்பு நீக்க வேண்டும். அதோடு அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், லட்சக்கணக்கான பட்டியலின மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்று எச்சரிக்கிறேன், என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x