

கேரளா: தமிழக முன்னாள் ஆளுநரும், உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதியுமான எம். பாத்திமா பீவி உடல்நலக் குறைவால் இன்று (நவ.23) காலமானார். அவருக்கு வயது 96.
தமிழக முன்னாள் ஆளுநரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான எம். பாத்திமா பீவி இன்று உடல்நலக் குறைவால் காலமானார். கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது அவரது உயிர் பிரிந்துள்ளது. மறைந்த பாத்திமா பீவி, உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி ஆவார். தமிழக ஆளுநராகவும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
1927-ம் ஆண்டு கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிறந்த பாத்திமா பீவி, திருவனந்தபுரத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் வேதியியலில் பட்டப்படிப்பை முடித்தார், பின்னர் அரசு சட்டக் கல்லூரியில் எல்எல்பி படித்தார். தங்கப் பதக்கம் வென்ற அவர், மாவட்ட நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீதித்துறை சேவையில் மாஜிஸ்திரேட்டாக சேர்ந்தார்.
1974-ல் மாவட்ட அமர்வு நீதிபதியாக பதவியேற்ற அவர், 1983ல் கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1989 இல், அவர் உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். கடந்த 1997-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை, தமிழக ஆளுநராக இருந்தார். மறைந்த பாத்திமா பீவிக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நீதித்துறையைச் சேர்ந்தவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.