Published : 21 Nov 2023 08:14 AM
Last Updated : 21 Nov 2023 08:14 AM

வருவாய் இழப்பு காரணமாக தமிழகம் முழுவதும் நவ.25 முதல் ஆவின் பச்சை பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம்

சென்னை: தமிழகம் முழுவதும் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நவ.25-ம் தேதி முதல் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, கொழுப்பு சத்து அடிப்படையில் பிரித்து, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீல நிற பாக்கெட்களில் அடைத்து விற்கப்படுகிறது. சென்னையில் மட்டும் 14.75 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் (4.5% கொழுப்பு சத்து உள்ள நிலைப்படுத்தப்பட்ட பால்) விநியோகத்தை வரும் 25-ம் தேதி முதல் நிறுத்த ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மொத்த பால் விற்பனையில் ஆவின் பச்சை நிற பாக்கெட் விற்பனை 40 சதவீதம் ஆகும். 40 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டாகவும் இது உள்ளது.

அதேநேரம், அதிக கொழுப்பு சத்து கொண்ட பால் தயாரிக்க, வெளி மாநிலங்களில் இருந்து வெண்ணெய், பால் பவுடர் ஆகியவற்றை ஆவின் அதிக விலைக்கு வாங்கி, குறைந்த விலையில் பச்சை நிற பால் பாக்கெட்டை விநியோகம் செய்வதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், தலைநகர் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய புறநகர் மாவட்டங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

அதுவும், மிக குறைந்த அளவிலேயே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையிலும் நேரடி ஆவின் பாலகங்கள், பால் முகவர்கள் ஆகியோருக்கு பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை ஆவின் படிப்படியாக குறைத்து வருகிறது. அதற்கு மாற்றாக, 3.5 சதவீதம் கொழுப்பு சத்து கொண்ட ‘டிலைட்’ ஊதா நிற பால் பாக்கெட் (சமன்படுத்தப்பட்ட பால்) விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறியது: தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 25-ம் தேதி முதல் பச்சை நிற பால் பாக்கெட் சில்லறை விற்பனை நிறுத்தப்பட உள்ளது. தற்போதைய பச்சை நிற பால் அட்டைதாரர்களுக்கு டிச.15-ம் தேதி வரை வழங்கப்படும். அதன்பிறகு, அவர்களுக்கும் நிறுத்தப்படும். அட்டைதாரர்களுக்கு பச்சை நிற பாக்கெட்டின் விலைக்கே டிச.1 முதல் டிலைட் பால் அட்டை தரப்படும். டிலைட் பால் விநியோகம் டிச.16 முதல் தொடங்கப்படும் என்றனர்.

இதுகுறித்து சென்னையில் உள்ள பால் முகவர்கள் கூறும்போது, “மொத்த பால் விற்பனையில், பச்சை நிற பாக்கெட் பால் அதிக அளவில் விற்பனையாகிறது.

இதை வரும் 25-ம் தேதி முதல் நிறுத்த ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதற்கு மாற்றாக, கொழுப்பு சத்து குறைந்த டிலைட் பால் பாக்கெட்களை வழங்கி வருகின்றனர். இதனால், தனியார் நிறுவன பால் பாக்கெட்களை மக்கள் நாடிச் செல்லும் நிலை உள்ளது” என்றனர்.

ஆவின் விளக்கம்: இதுபற்றி ஆவின் மேலாண்மை இயக்குநர் சு.வினீத் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆவின் நிர்வாகம் எல்லா காலக்கட்டங்களிலும், மக்கள் நலன், அவர்கள் விருப்பம் அறிந்து செயல்படுகிறது. எனவே, மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எவ்வித தடையின்றி விநியோகம் செய்யப்படுகிறது என கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x