Last Updated : 21 Nov, 2023 06:23 AM

 

Published : 21 Nov 2023 06:23 AM
Last Updated : 21 Nov 2023 06:23 AM

கணை ஏவு காலம் 40 | பல நாடுகளுக்கு பரவிய மக்கள் புரட்சி @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

காசா பகுதியில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனை வளாகத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளின் சுரங்கப் பாதையை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

இந்த அத்தியாயத்தில் நாம் பாலஸ்தீனத்தில் இருந்து விலகி சிறிது வெளியே செல்ல வேண்டியிருக்கிறது. நெடுந்தொலைவல்ல. பக்கத்து நாடுதான். காசாவில் இருந்து ரஃபா கிராஸிங் வழியே நடந்தே கூட போய்விட முடியும். ஆனால் அவசரப்பட முடியாது. சரித்திரம் இங்கே சரியாகப் புரிய வேண்டுமென்றால் நாம் துனிஷியா வழியாகத்தான் எகிப்துக்குச் செல்ல வேண்டும்.

துனிஷியா, ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடக்குப் பகுதியில் இருக்கும் ஒரு சிறிய நாடு. சர்வாதிகாரம். அடக்குமுறை. காட்டாட்சி. அநியாயச் சட்டங்கள். பென் அலி என்பவர் அப்போது ஆட்சியாளராக இருந்தார். ஒரு நாள் இரண்டு நாளல்ல. அந்த தேசம் 23 ஆண்டுகளாக அவரது பிடிக்குள்தான் இருந்தது. ஆனால் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துதானே தீர வேண்டும்?

டிசம்பர் 17, 2010 அன்று முஹம்மது பொஅஸீஸி என்கிற 27 வயது சாலை யோரப் பழ வியாபாரியை அந்த ஊர் போலீஸ்காரர் ஒருவர் தாக்கினார். தகாதவார்த்தைகளால் திட்டினார். அந்த இளைஞனுக்கு ஏற்கெனவே வேறெதிலெல்லாம் விரக்தி இருந்ததோ தெரியாது. தற்கொலை செய்து கொண்டான்.

மறுநாள் துனிஷியாவில் மக்கள்புரட்சி வெடித்தது. அடக்கு முறைக்கு எதிரான புரட்சி.இந்த ஆட்சியாளர்கள் எங்களுக்கு வேண்டாம். என்னஆனாலும் சரி; இவர்களை விரட்டிஅடித்துவிட்டு மக்களாட்சியைக் கொண்டு வந்தே தீருவோம் என்று வெறி கொண்டு போராடத் தொடங்கினார்கள்.

கவனியுங்கள். இந்தப் புரட்சியை யாரும் ஒருங்கிணைக்கவில்லை. தலைமை தாங்கவில்லை. வழி நடத்தவில்லை. மக்கள்தன்னியல்பாகக் கிளர்ந்து எழுந்தார்கள். ட்விட்டர் மூலம் (இன்றைய எக்ஸ்) மட்டுமேதகவல் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. நாடெங்கும் நடந்த கிளர்ச்சி குறித்த விவரங்கள் அனைத்தும் ட்விட்டர் வழியாகவே உலகுக்குத் தெரியப்படுத்தப்பட்டன. அதுநாள் வரை ஊடக சுதந்திரம் என்ற ஒன்றின் சுவடுகூட இல்லாதிருந்தபடியால் துனிஷியா குறித்து யாருக்கும் எதுவும் தெரியாதிருந்தது. முதல் முதலாக ஒரு மக்கள் புரட்சியின் மூலம் அந்த தேசத்தைக் குறித்த அனைத்து விவரங்களும் வெளி உலகத்துக்குத் தெரிய வந்தன.

உடனே மத்தியக் கிழக்கின் பெரும்பாலான நாடுகள் சிலிர்த்துக் கொண்டுபுரட்சிக்கு ஆயத்தமாயின. எல்லா இடங்களிலும் சர்வாதிகாரம். எல்லா இடங்களிலும் அடக்குமுறை. துனிஷியாவில் ஒரு மக்கள் புரட்சி சாத்தியமென்றால், அது ஏன் நம் நாட்டில் முடியாது என்று எல்லோரும் நினைத்ததன் விளைவு, அடுத்த 2011-ம் ஆண்டு முழுவதும் மத்தியக் கிழக்கு மக்கள், புரட்சி தீவிரத்தில் மட்டுமே இருந்தார்கள். மத்தியக் கிழக்கு தேசங்களின் வரலாற்றில் அது ஒருமறக்கவியலாத ஆண்டானது. துனிஷியாவில் தொடங்கிய மக்கள் புரட்சி, மேற்கு சகாரா, எகிப்து, அல்ஜீரியா, லிபியா, ஜோர்டன், மாரிடானியா, சூடான், ஓமன், ஏமன், சவுதி அரேபியா, சிரியா, மொராக்கோ, இராக், சோமாலியா, பஹ்ரைன், குவைத் என்று எங்கெங்கும் பரவியது.

இதில் இந்த வரலாற்றுக்கு நெருக்கமான புரட்சி என்பது, எகிப்தில் நிகழ்ந்த மக்கள் புரட்சி. துனிஷியாவில் டிசம்பர் 18 அன்று புரட்சி தொடங்கியது. அதற்கு சரியாக 40 நாட்களில் (ஜனவரி 28) எகிப்து மக்கள் வீதிக்கு வந்துவிட்டார்கள். துனிஷியாவிலாவது ஊர் பேர் தெரியாத சர்வாதிகாரி. வெறும் உள்ளூர் பிரபலம். ஆனால், எகிப்தின் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக், உலகறிந்த தலைவர். முப்பதாண்டுகளுக்கும் மேலாக எகிப்து என்னும் தேசம் அவரது கைப்பிடிக்குள்தான் சுருண்டு கிடந்தது. ஹோஸ்னி முபாரக் உலகச் சுற்றுப் பயணமெல்லாம் செய்வார்.வெளிநாட்டு விவகாரங்களில் தலையிடுவார். மத்தியஸ்த வேலைகளில் ஆர்வம் காட்டுவார். எல்லாம் உண்டு. ஆனால் அவரது தேசத்துக்குள் என்ன நடக்கிறது என்பதை வெளியே சொல்ல விடமாட்டார்.

உண்மையில் வாழவே முடியாததொரு அவல வாழ்வைத்தான் அப்போது எகிப்து மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மக்கள் தம்மை மக்களாக உணரவே முடியாத, மந்தையாக மட்டுமே உணர்ந்த அவலம்தான் அங்கே புரட்சிக்கான அடிப்படைக் காரணம். முப்பதாண்டு கால கோபத்தை அம்மக்கள் 15 நாட்களில் காட்டினார்கள். துனிஷியாவில் தன்னெழுச்சியாகப் புரட்சி நடந்தது என்றால் எகிப்துப் புரட்சி திட்டமிடப்பட்டு, பிசிறில்லாமல் வழி நடத்தப்பட்டதொரு புரட்சி.

அது எப்படி நடந்தது, யார் வழி நடத்தினார்கள், என்னென்ன செய்தார்கள் என்பது இங்கே அநாவசியம். வெறும் 15 நாட்களில் மக்கள் புரட்சி வெற்றி பெற்று எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்பதவி விலகும்படி ஆனது. பக்கத்து ஊரில்நடந்த புரட்சி பாலஸ்தீனத்தில் எதிரொலிக்காமல் இருக்குமா? ஆனால், அங்கேநடந்தது மக்கள் புரட்சியல்ல. அது வேறு. முற்றிலும் பரிதாபகரமானது.

(தொடரும்)

முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 39 | முரண்டு பிடிப்பது ஹமாஸ் மட்டும்தான்.. @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x