Published : 18 Nov 2023 04:51 AM
Last Updated : 18 Nov 2023 04:51 AM

மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு மணிமண்டபம்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்தசங்கரய்யாவின், இல்லத்துக்கு நேரில் சென்ற மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், அவரது படத்துக்கு மலர் தூவிமரியாதை செலுத்தினார் | படம்: எம்.முத்துகணேஷ்

தாம்பரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்தசங்கரய்யாவின், குரோம்பேட்டை இல்லத்துக்கு நேரில் சென்ற மத்திய மீன்வளத் துறைஇணை அமைச்சர் எல்.முருகன், அவரது படத்துக்கு மலர் தூவிமரியாதை செலுத்தினார்.

அவருடன் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக தலைவர்வேதசுப்பிரமணியம் ஆகியோர் அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் எல்.முருகன்கூறியதாவது: மறைந்த சங்கரய்யா தமிழகத்தில் மிக மூத்த அரசியல் தலைவர். சுதந்திரத்துக்காக பாடுபட்டவர். தனதுஇறுதி மூச்சு வரை, தான் கொண்ட கம்யூனிஸ்ட் கொள்கையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அனைத்து தரப்பு மக்களும் மிகப்பெரிய மதிப்பை வைத்திருக்கும் பழம்பெறும் அரசியல் தலைவராக இருந்தார். அவருடைய சமூக பங்களிப்பு அளப்பறியது. சட்டப்பேரவை உறுப்பினராக 3 முறை இருந்த போது, தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு தருணங்களில் குரல் கொடுத்தவர்.

அவர் வாழ்க்கையையே கம்யூனிஸ்ட் கட்சியோடு, ஏழைஎளிய மக்களின் மேம்பாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார். அவருக்கு மணிமண்டபம் நிச்சயம் கட்ட வேண்டும். மிகப்பெரிய ஒரு தலைவர். தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமையான அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டால், தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைவர்.

விருதுகள் அனைத்துக்கும் சில நடைமுறைகள் உள்ளன. பாரத ரத்னா விருது குறித்து அவரது குடும்பத்தினர் முன்னெடுப்புகள் செய்யும்போது, உடனிருந்து முன்னெடுப்புகளை செய்வோம். அவருடைய சேவையை நிச்சயம் நாம் போற்ற வேண்டும். அதற்கான முன்னெடுப்புகள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

(சங்கரய்யாவின் உடல், கடந்த 16-ம் தேதி பெசன்ட் நகர்மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இது தொடர்பான செய்தி,17-ம் தேதியிட்ட ‘இந்து தமிழ்திசை' நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது. அதில்,சங்கரய்யா உடலுக்கு குடும்பத்தினர் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது என்பதற்கு பதிலாக இறுதிச் சடங்கு செய்யப்பட்டது என தவறுதலாக இடம்பெற்றுவிட்டது.)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x