Published : 17 Nov 2023 07:14 PM
Last Updated : 17 Nov 2023 07:14 PM

செய்யாறு சிப்காட் ஆலைக்கு எதிராக தூண்டுதலின் பேரில் போராட்டம்: அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

அமைச்சர் எ.வ.வேலு | கோப்புப்படம்

திருவண்ணாமலை: "தூண்டுதலின் பேரில் திட்டமிட்டு இந்த அரசு எந்தப் பணிகளையும் செய்துவிடக் கூடாது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வரக் கூடாது. பட்டதாரிகள் வேலைக்குச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, விவசாய நிலங்களைப் பறிப்பதாக செய்யப்பட்டும் திட்டமிட்ட ஒரு பிரச்சாரம்தான் இந்தப் போராட்டங்கள். விவசாயிகளை வஞ்சிப்பதோ, விவசாய நிலங்களை அபகரிப்பதோ இந்த அரசாங்கத்தின் நோக்கம் அல்ல" என்று அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.

திருவண்ணாமலையில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்சாலைக்கு நிலம் எடுக்கும் பணிகள் 3 கட்டமாக பிரித்து நடைபெற்றது. முதல் கட்டமாக 622 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது அயல்நாட்டு தொழிற்சாலைகள் உள்ளிட்ட 13 தொழிற்சாலைகள் வந்தன. இதன்மூலம் ஏறத்தாழ 30 ஆயிரம் தற்போது பணியில் உள்ளனர். இதில், செய்யாறு, ஆரணி, வந்தவாசி தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் பணியில் உள்ளனர்.

இரண்டாவது கட்டமாக 1860 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என முடிவெடுத்து, நிலம் கையகப்படுத்தப்பட்டது. திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வரின் முயற்சியில், இன்றைக்கு 55 நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அங்கு வரவுள்ளது. இதில் ஒரு லட்சத்துககும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். இன்னும் பல அயல்நாட்டு தொழிற்சாலைகள், இந்தியாவில் இருக்கும் முன்னணி தொழில் நிறுவனங்களைக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுத்து வருகிறோம். மூன்றாவது கட்டமாக, 1200 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக விவசாய நிலங்களை நேரடியாக எடுக்கவில்லை. இது தொடர்பாக பல இடங்களில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

ஒரு விவசாய நிலத்தை எடுத்து தொழிற்சாலை அமைத்தால், 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதாக ஊர் ஊராக சென்று விளக்கம் அளிக்கப்பட்டது. மேல்மா, தேத்துறை உள்ளிட்ட 9 கிராமங்களிலும், அரசு சார்பாக பல்வேறு விளக்கக் கூட்டங்கள், கருத்துக் கேட்புக் கூட்டங்கள் பலமுறை நடத்தப்பட்டன. அதில் 1881 விவசாயிகளின் நிலத்தை அரசு எடுக்கிறது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் 239 பேர் மட்டுமே. அரசைப் பொறுத்தவரை, நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு தற்போதைய சந்தை நிலவரத்தைவிட, இரண்டரை மடங்கு விலை கொடுக்கிறது.

அந்தத் தொகையைக் கொண்டு இன்னொரு நிலத்தை வாங்கி விவசாயிகள் மேலும் மேலும் விவசாயம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், அரசு அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை இரண்டரை மடங்காக உயர்த்தி தருகிறது. அரசைப் பொறுத்தவரை, விவசாயிகளை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும், பொருளாதார ரீதியாக அவர்களுக்கு கைகொடுக்க வேண்டும் என்பதுதான் விருப்பம்.

தொழிற்சாலைகள் இருந்தால்தான், படித்தபட்டதாரிகளுக்கு, இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலையில்லா திண்டாட்டம் குறையும். தொழிற்சாலைகளைக் கொண்டு வருவதற்கு நிலம் தேவைப்படுகிறது. தொழிற்சாலை எங்கு கட்ட முடியும்? கடலிலும், வானத்திலும் கட்ட முடியாது. நிலத்தின்தான் கட்ட முடியும். படித்த பட்டதாரிகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரவேண்டும் என்ற நம் மாவட்ட மக்களின் கோரிக்கையைத்தானே அரசு நிறைவேற்றுகிறது.

ஆனால், இதில் சிலபேர் மட்டும் தொடர்ந்து 125 நாள் போராட்டம் நடத்துகின்றனர். 5 பேர் 10 பேர் என ஆங்காங்கே அமர்ந்து போராட்டம் நடத்தினர். அந்த ஊரிலேயே இல்லாதவர்களை எல்லாம் அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடச் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். அந்தப்பகுதி மக்களை வெளியூரைச் சேர்ந்த ஒருவர் தூண்டிவிடுகின்றனர். குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அருள் ஆறுமுகம் என்ற நபர்தான் மக்களை தூண்டிவிடுகிறார். இங்குள்ளவர்கள் எல்லாம் விவசாயிகள் இல்லையா? விவசாய நிலம் தேவை அதை மறுக்கவில்லை. அதேநேரம் தொழிற்சாலைகளும் தேவை.

ஒரு தூண்டுதலின் பேரில் திட்டமிட்டு இந்த அரசு எந்தப் பணிகளையும் செய்துவிடக்கூடாது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வரக்கூடாது.பட்டதாரிகள் வேலைக்குச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, விவசாய நிலங்களைப் பறிப்பதாக செய்யப்பட்டும் திட்டமிட்ட ஒரு பிரச்சாரம்தான் இந்த போராட்டங்கள். விவசாயிகளை வஞ்சிப்பதோ, விவசாய நிலங்களை அபகரிப்பதோ இந்த அரசாங்கத்தின் நோக்கம் அல்ல.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளின் குடும்பத்தினர் என்னிடம் மனு அளித்துள்ளனர். அதை நேரடியாக முதல்வரிடம் கொடுத்து, அவர்கள் மீதான குண்டர் சட்டத்தில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை இந்த தொகுதியைச் சேர்ந்த அமைச்சர் என்ற முறையில் மேற்கொள்வேன்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய 7 விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும், அதனை அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x