Published : 17 Nov 2023 05:44 AM
Last Updated : 17 Nov 2023 05:44 AM

சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய 7 விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். (கோப்பு படம்)

திருவண்ணாமலை/சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் 3-வது திட்ட விரிவாக்கப் பணிக்காக மேல்மா உள்ளிட்ட 11 ஊராட்சிகளில், 3,174ஏக்கர் விளை நிலங்களைக் கைப்பற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து `மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம்' சார்பில் கடந்த ஜுலை 2-ம் தேதிமுதல் 124 நாட்களுக்கு தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

மேல்மா கூட்டுசாலையில் பந்தல் அமைத்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். மேலும், காவல் துறையினரின் தடையை மீறி, செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த 2-ம் தேதி பேரணியாகப் புறப்பட்டனர்.

ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை அரசிடம் ஒப்படைப்பதற்காக செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்ற விவசாயிகளை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியபோது, இரண்டு தரப்பினருக்குஇடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது, தடையை மீறி பேரணி சென்றது, காவல் துறை வாகனங்களை சேதப்படுத்தியது, ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதிஇன்றி கூடியது என 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள்ஆறுமுகம் உள்ளிட்ட 22 பேர்கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்டு, வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் அத்திபாடி கிராமத்தைச் சேர்ந்தஅருள் ஆறுமுகம்(45), விவசாயிகள் செய்யாறு வட்டம் தேத்துறை பச்சையப்பன்(47), எருமைவெட்டி தேவன்(45), மணிப்புரம் சோழன்(32), மேல்மா திருமால்(35), நர்மாபள்ளம் மாசிலாமணி(45), குரும்பூர் பாக்கியராஜ்(38) ஆகிய 7 பேரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

இதையடுத்து, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரிடமும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை செய்யாறு காவல் துறையினர் வழங்கினர்.

ஜனநாயகத்துக்கு எதிரானது.. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: அமைதியாகப் போராடும் விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த திமுக அரசின் கோழைத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பாமக தலைவர் அன்புமணி: உரிமைக்காகப் போராடுவோரை குண்டர் சட்டத்தில் அடைக்கும் தமிழக அரசின் செயலை நியாயப்படுத்த முடியாது. மண்ணுக்கு துரோகம் செய்பவர்களையும், அதற்கு துணைபுரிவோரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: நில உரிமையை மீட்க, அறவழியில் போராடிய விவசாயிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது ஜனநாயகத்துக்கு எதிரானது.

பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி: எதிர்க்கட்சியாக இருந்தபோது விவசாயிகளின் தோழன்போல வேடமிட்ட திமுக, ஆளும் கட்சியான பிறகு அடக்குமுறையை ஏவுகிறது.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன்: விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை ஏவியது ஜனநாயகத்துக்கு விரோதமானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x