Published : 08 Nov 2023 04:12 AM
Last Updated : 08 Nov 2023 04:12 AM
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில், நேற்று அதிகாலை பலத்த மழை பெய்தது. காலை 10 மணிக்குப் பிறகு தூறல் இருந்தது.
இந்த மழையால் நாகை நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் குளம்போல தேங்கியது. இதனால், பயணிகள் மிகுந்த சிரமத்துக் குள்ளாகினர். நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலை, புதிய நம்பியார் நகர் ஆகிய பகுதியில் தேங்கிய மழைநீரை, நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், காடம்பாடி சவேரியார் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன்பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் வெங்கடலட்சுமணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பள்ளிக்கு விடுமுறை: காடம்பாடியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியது. மேலும், வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் மதியஉணவு சமையல் அறை சுவர்களில் மழைநீர் கசிந்தது. இதனால், இப்பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 84.40 மி.மீ மழை பதிவாகியது.
மாவட்டத்தின் பிற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): நாகப்பட்டினம் 70.30, திருப்பூண்டி 22.40, திருக்குவளை 18.50, வேதாரண்யம் 18.20, தலைஞாயிறு 16.40, கோடியக்கரை 5.
ஆகாய தாமரை அகற்றும் பணி: தொடர்ந்து, நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் இலுப்பூர் கிராமத்தில், கடுவையாற்றில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதை, மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, நாகை மாலி எம்எல்ஏ, பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் (வெண்ணாறு வடி நில கோட்டம்) ராஜேந்திரன், உதவிச் செயற்பொறியாளர் கமலக் கண்ணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ச.உமா மகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர். வட கிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடுவையாற்றில் ஆகாய தாமரை செடிகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT