Published : 08 Nov 2023 04:14 AM
Last Updated : 08 Nov 2023 04:14 AM

தூத்துக்குடி, தென்காசி, நெல்லையில் பலத்த மழை

படங்கள்: என்.ராஜேஷ்

தென்காசி / திருநெல்வேலி / தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டியது. குறிப்பாக ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை நேற்று அதிகாலை வரை நீடித்தது.

பலத்த மழை: தொடர்ந்து நேற்று காலையில் மழை பெய்யவில்லை. ஆனால், பிற்பகலில் மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை கொட்டியது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு குறிப்பாக மானாவாரி பகுதிகளில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் 1 மணி நேரத்துக்கு மேலாக மிதமான மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளதால் மழைநீர் விரைவாக வடிந்தோடியது. ஆங்காங்கே சில தாழ்வான பகுதிகளில் மட்டும் மழைநீர் தேங்கி நின்றது.

அந்த நீரை மாநகராட்சி பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் டேங்கர் லாரிகள் மூலம் உறிஞ்சி அகற்றினர். மழைநீர் தேங்கிய பகுதிகள் மற்றும் மழைநீர் வெளியேற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): தூத்துக்குடி 18.1, வைகுண்டம் 13.7, திருச்செந்தூர் 26, காயல்பட்டினம் 24, குலசேகரன்பட்டினம் 12, சாத்தான்குளம் 9.2, கோவில்பட்டி 76, கழுகுமலை 56, கயத்தாறு 77, கடம்பூர் 72, எட்டயபுரம் 69, விளாத்திகுளம் 15, காடல்குடி 3, வைப்பார் 19, சூரன்குடி 21, ஓட்டப்பிடாரம் 92, மணியாச்சி 16, வேடநத்தம் 35, கீழ அரசடி 5 மி.மீ., மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓட்டப்பிடாரத்தில் 92 மி.மீ., மழையும், குறைந்த பட்சமாக காடல்குடியில் 3 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 650.20 மி.மீ., மழை பெய்துள்ளது. சராசரியாக 34.69 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு இதுவே அதிகபட்ச மழையாகும் என்பது குறிப்பிடதக்கது.

தென்காசி: தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள் ளது. சேரன்மகாதேவியில் அதிகபட்சமாக 75.80 மி.மீ. மழை பதிவாகியிருந்தது தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை இடைவிடாமல் மழை பெய்துகொண்டே இருந்தது.

நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டை யில் 62.40 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணையில் 58 மி.மீ., தென்காசியில் 48.50, சங்கரன்கோவிலில் 42, ஆய்க்குடியில் 40, குண்டாறு அணையில் 36, ராமநதி அணையில் 30, சிவகிரியில் 27, கருப்பாநதி அணையில் 21.50, அடவிநயினார் அணையில் 7 மி.மீ. மழை பதிவானது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடனாநதி அணை நீர்மட்டம் நேற்று மூன்றரை அடியும், ராமநதி அணை நீர்மட்டம் 4 அடியும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 2 அடியும் உயர்ந்தது. குற்றாலம் அருவிகளில் நேற்று காலையும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. வெள்ளம் குறைந்த பின்னர் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் நேற்று காலை 8 மணிவரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 75.80 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மாவட்டத்திலுள்ள அணைப் பகுதிகளிலும் பிறஇடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்- 60, மணிமுத்தாறு- 19.20, நாங்குநேரி- 5.60,

பாளையங்கோட்டை- 10, பாபநாசம்- 9, ராதாபுரம்-, திருநெல்வேலி- தலா 7, சேர்வலாறு- 8, கன்னடியன் அணைக்கட்டு- 55.80, களக்காடு- 18.40, கொடுமுடியாறு- 16, மூலைக்கரைப்பட்டி- 13, நம்பியாறு- 28, மாஞ்சோலை- 74, காக்காச்சி- 48, நாலுமுக்கு- 49, ஊத்து- 31.

நீர்மட்டம்: பாபநாசம் அணை நீர்மட்டம் 89.40 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 693 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 404 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 60.85 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 546 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x