Published : 05 Nov 2023 04:22 AM
Last Updated : 05 Nov 2023 04:22 AM
வேலூர்: பீஞ்சமந்தை மலை கிராமத்துக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்துக்கு உட்பட்ட பீஞ்சமந்தை மலை கிராமத்தில் பாம்பு கடித்து சில மாதங்களுக்கு முன்பு இரண்டு பேர் உயிரிழந்தனர். சாலை வசதி இல்லாத மலை கிராமத்தில் இருந்து குறித்த நேரத்தில் சிகிச்சைக்கு செல்ல முடியாத நிலையில் இருவரும் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து, பீஞ்சமந்தை மலை கிராமத்துக் கென்று பிரத்யேகமாக தற்காலிக ஆம்புலன்ஸ் வசதி கொண்ட வாகனத்தை ஏற்பாடு செய்ததுடன், அந்த வாகனத்தை மலை கிராம மக்கள் பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டது. இந்நிலையில், பீஞ்சமந்தை மலை கிராம மக்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இதனை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். வேலூர் கோட்டை அருகில் இருந்து இந்த வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பிரத்யேக ஆம்புலன்ஸ் வாகனம் மலை கிராம சாலைகளில் பயணிக்கும் வகையில் அதிக உந்து விசையுடன் கூடிய வாகனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்த வாகனத்தில் உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கும் வசதிகளுடனும், மருத்துவ உதவி தேவைப்படும் நபருக்கான படுக்கை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனம் பீஞ்சமந்தை மலை கிராமத்தில் முழு நேரமும் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார் (அணைக்கட்டு), ப.கார்த்திகேயன் (வேலூர்), அமலு விஜயன் (குடியாத்தம்), வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பானுமதி, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT