Published : 04 Nov 2023 12:29 PM
Last Updated : 04 Nov 2023 12:29 PM

சாதிவாரி கணக்கெடுப்பு | மத்திய அரசு உடனடியாக கலந்தாய்வைத் தொடங்கி கொள்கை முடிவை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

சென்னை: மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கான கலந்தாய்வை உடனடியாக தொடங்கி கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பாரதிய ஜனதா எதிரி அல்ல, அதேநேரத்தில் அது குறித்து விரிவான கலந்தாய்வுகளை நடத்திய பிறகு தான் சரியான முடிவை எடுக்க முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அது மக்களிடையே சாதி வேறுபாட்டை அதிகரிக்கச் செய்து விடும் என்று கூறி வந்த பாரதிய ஜனதாக் கட்சி, அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் எதிர்க்கவில்லை என்று கூறும் அளவுக்கு வந்திருப்பதே வரவேற்கத்தக்க ஒன்று தான். சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

அதேநேரத்தில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவான இந்த நிலைப்பாடு ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டதாக இருக்கக் கூடாது. நரேந்திர மோடி தலைமையிலான முதலாவது அரசில் உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத்சிங் அவர்கள், 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓபிசி வகுப்பினரின் விவரங்கள் திரட்டப்படும் என்று உறுதியளித்திருந்தார். 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார். ஆனால், அந்த வாக்குறுதி பின்னாளில் காற்றில் விடப்பட்டதைப் போன்று இப்போதைய நிலைப்பாடும் மாறிவிடக் கூடாது.

2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தான் நடைபெறக்கூடும். அதை உண்மையாகவே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவது குறித்து ஆராயும் எண்ணம் மத்திய அரசுக்கு இருந்தால், அதற்கான கலந்தாய்வுகளை இப்போதே தொடங்க வேண்டும். அதற்காக ஓர் ஆணையத்தை அமைத்து, 6 மாதங்களுக்குள் அதன் அறிக்கையை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து மத்தியில் ஆளும் கட்சி திறந்த மனதுடன் இருப்பதாக நம்ப முடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x