Published : 24 Jul 2023 10:12 AM
Last Updated : 24 Jul 2023 10:12 AM

தமிழகத்தில் 100% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் - பிறந்தநாள் குறிப்பில் ராமதாஸ் விருப்பம்

பாமக நிறுவனர் ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: "அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை பெற்றுத் தர வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் 100% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

தனது பிறந்தநாளை ஒட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் ஓர் நீண்ட செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், "என் தாயின் கருவறையிலிருந்து பூமித்தாயின் மடிக்கு நான் இடம் பெயர்ந்து இன்று (25.07.2023) 84 ஆண்டுகள் நிறைவடைந்து 85-ஆம் ஆண்டு தொடங்குகிறது. இந்த இனிமையான தருணத்தில் என்னினும் இளையவர்களை வாழ்த்துகிறேன்... மூத்தவர்களிடமிருந்து வாழ்த்துகளைக் கோருகிறேன்.

பொதுவாக மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்கள் தான் தேர்வுக் காலம். ஆனால், என்னைப் பொறுத்தவரை ஜூலை மாதம் தான் எனக்கு தேர்வுக் காலம்.

ஆம்! என்னைப் பொறுத்தவரை பிறந்தநாள் என்பது கொண்டாட்டங்களுக்கான காலம் என்பதை விட, கடந்த ஓராண்டில் என்னென்ன சாதனைகளையெல்லாம் படைத்தோம், என்னென்ன வாய்ப்புகளை எல்லாம் தவற விட்டோம் என்பதை எடை போட்டு மதிப்பிடுவதற்கான நாள் ஆகும். ஜூலை 16-ஆம் நாள் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாள், ஜூலை 20-ஆம் நாள் வன்னியர் சங்கம் தொடங்கப் பட்ட நாள். ஜூலை 25-ஆம் நாள் எனது பிறந்தநாள். ஜூலை மாதத்தில் இரு அமைப்புகளின் செயல்பாடுகளையும், எனது செயல்பாட்டையும் ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால் அது தேர்வு மாதம்.

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகளையும், வன்னியர் சங்கத்தின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்யும் போது, அவற்றில் வலிகளும் நிறைந்திருக்கும், மகிழ்ச்சியும் பொங்கி வரும். ஆனால், எனது பிறந்தநாள் எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான தருணம் தான். என்னை அறிந்தவர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எல்லையில்லா அன்பை நான் காட்டுவதும், என்னை அறிந்தவர்கள், என்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் தங்களையும் தருவதற்கு தயாராக இருப்பதும் தான் மகிழ்ச்சிக்கு காரணம்.

மனிதர்களைக் கடந்து மண், மரங்கள், மழலைகள், மழை, மலர்கள், மஞ்சள் நிறம், பறவைக் கூட்டங்கள் என அனைத்தும் என்னை ஏதோ ஒரு வகையில் மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

சிலரைப் பார்த்து, ‘‘ அவர் ரொம்ப கொடுத்து வைத்தவர்ப்பா’’ என்பார்கள். என்னைப் பொறுத்தவரை நான் தான் இந்த உலகில் மிகவும் கொடுத்து வைத்தவன். 84 ஆண்டுகளுக்கு முன் இந்த மண்ணில் பிறந்த போது, எனக்கு இருந்த சொந்தங்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் தான். ஆனால், இன்று உலகெங்கும் உள்ள 10 கோடி தமிழ் இதயங்களில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதையும் கடந்து ஒரு கோடி தமிழ் இதயங்கள் எனக்காகவே துடித்துக் கொண்டிருக்கின்றன.

பாசமிக்கத் தமிழ்ச் சொந்தங்களும், பாட்டாளி சொந்தங்களும் என்னை அய்யா என்று அழைப்பதற்கு, உலகில் உள்ள எந்த அதிகார பதவியும் ஈடு இணை அல்ல. அதிகார பதவிகளையும், பணத்தையும் கொண்டிருப்பவர்களைச் சுற்றிலும் கூட்டம் இருக்கும். அது அவர்களுக்கான கூட்டம் அல்ல... அவர்களிடம் உள்ள பணம் மற்றும் பதவிக்கான கூட்டம். என்னிடம் பணமும் இல்லை... பதவியும் இல்லை. ஆனால், என்னிடம் பெரும் கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டம் என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்கும் கூட்டம் அல்ல... மாறாக, எனக்காக எதையும் தியாகம் செய்யும் கூட்டம்.

இது பெருமைக்காக சொல்லும் வசனம் அல்ல. உண்மை. நான் கடந்து வந்த பாதை மலர்களால் ஆனதல்ல... முட்களால் ஆனது தான். அந்தப் பயணத்தில், மிக, மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு சமூக நீதி பெற்றுத் தருவதற்காக எனது அறைகூவலை ஏற்று, எதையும் எதிர்பார்க்காமல் களமிறங்கி, துப்பாக்கி குண்டுகளையும், காவல்துறையினரின் குண்டாந்தடி தாக்குதல்களையும் தாங்கி 21 சொந்தங்கள் உயிர்த்தியாகம் செய்தனர். ஒவ்வொரு வினாடியும் அவர்களை வணங்குகிறேன்; அவர்களின் தியாகங்களை போற்றுகிறேன். அதேபோல், என் மீது விழுந்த கல்லடிகளை தாங்கியர்கள், தடியடிகளை தாங்கியவர்கள், ஆயுதத் தாக்குதல்களுக்கு ஆளாகி குருதி கொட்டியவர்கள், எனக்காக போராடி மார்பைத் துளைத்த துப்பாக்கிக் குண்டைத் தாங்கி இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் உணவு உண்ண மறுப்பவர்கள் என அப்பட்டியல் மிகவும் நீளமானது.

இப்போது சொல்லுங்கள்.... நான் கொடுத்து வைத்தவன் தானே?

நான் பிறந்தது எளிய குடும்பத்தில் தான், நான் வளர்ந்தது மிகவும் எளிய சூழலில் தான், நான் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பதும் எளிய சூழலில் தான். அந்த சூழல் தான் எனக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. பள்ளிப்படிப்பை முடிப்பதற்கே நான் என்ன பாடுபட்டேன், எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டேன் என்பதெல்லாம் விவரிக்க முடியாதவை. அதன்பின் மருத்துவப் படிப்பை படித்து முடிப்பதற்குள் பொருளாதாரம் என்னை கசக்கிப் பிழிந்து புரட்டிப் போட்டு விட்டது. நான் பார்த்த மக்களின் பெரும்பான்மையான மக்கள் என்னை விட பின்தங்கிய சூழலில் தான் இருந்தனர்.

நான் பார்த்து வளர்ந்த மக்களை அந்தச் சூழலில் இருந்து மீட்க வேண்டும்; கல்வியும், வேலையும் பெற்று வாழ்வில் முன்னேறுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற வேட்கை எனக்குள் பிறந்தது. அதன் பயன் தான் எனது பொதுவாழ்வுப் பயணம் ஆகும்.

எனது பொதுவாழ்வுப் பயணத்தில் அரசியல், சமூக நீதி, இனம், மொழி, இயற்கை, சுற்றுச்சூழல் சார்ந்து என்னென்ன இலக்குகளையெல்லாம் நான் வரித்துக் கொண்டேனோ, அந்த இலக்குகளை எனது 44 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் இன்னும் முழுமையாக என்னால் அடைய முடியவில்லை.

* சமூகத்தில், மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னிய மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு இணையான அளவு இடப் பங்கீட்டை வென்றெடுத்துக் கொடுத்து வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டும்.

* அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீட்டை பெற்றுத் தர வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் 100% இடப் பங்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

* தமிழ்நாட்டின் நிர்வாகத்தில் அன்னை தமிழுக்கு அரியணை அளிக்கப்பட வேண்டும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.

* தமிழ்நாட்டில் பெய்யும் மழையில் ஒரு சொட்டு நீர் கூட வீணாக கடலில் கலக்காத நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்.

* ஒரு சொட்டு மது கூட இல்லாத அளவுக்கு முழுமையான மதுவிலக்கு ஏற்படுத்தபட வேண்டும்.

* ஒரு புகையிலை கூட இருக்கக்கூடாது. அனைத்து வகை புகையிலைப் பழக்கங்களில் இருந்தும் மக்கள் மீட்கப்பட வேண்டும்.

* கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

* இவை அனைத்தையும் நினைத்த நேரத்தில் சாத்தியமாக்குவதற்காக தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும் என்பன தான் எனது இலக்குகளில் முதன்மையானவை.

இந்த இலக்குகளை இதுவரை முழுமையாக அடைய முடியவில்லை என்றாலும் கூட, அதை நோக்கிய பயணத்தில் பெருந்தொலைவை அடைந்து விட்டோம்.

வன்னியர்கள் உள்ளிட்ட 116 சாதிகளுக்கு 20% இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்திருக்கிறோம்.

அருந்ததியர்களுக்கு 3%, இஸ்லாமியர்களுக்கு 3.5% உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துள்ளோம்.

தேசிய அளவில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்துள்ளோம்.

மருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பில் பட்டியலின மாணவர்களுக்கு 15%, பழங்குடியின மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறோம்.

தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம், தமிழைத் தேடி இயக்கம் ஆகியவற்றின் மூலம் அன்னைத் தமிழைக் காக்க பரப்புரை மேற்கொண்டு வருகிறோம். அதனால் தான் அன்னைத் தமிழ் இன்னும் உயிருடன் இருந்து கொண்டிருக்கிறது.

இயற்கையைக் காக்க இதுவரை 50 லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம். பல்லாயிரக்கணக்கான ஏரிகளையும், குளங்களையும் தூர்வாரியிருக்கிறோம். தடுப்பணைகளைக் கட்டியிருக்கிறோம்.

இந்த இலக்குகளை இன்னும் சில ஆண்டுகளில் முழுமையாக எட்டிவிடுவோம் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சி என்ற இலக்கை எட்டுவதற்கு இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?

இந்த வினா தான் என்னை வாட்டிக் கொண்டிருக்கிறது.

1989-ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட போது, அடுத்தத் தேர்தலில் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. 1991-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்காவிட்டால், அந்தத் தேர்தலில் குறைந்தது 50 இடங்களில் நாம் வெற்றி பெற்றிருப்போம். அவ்வாறு வென்றிருந்தால், அந்த ஆண்டு நாம் தான் ஆட்சி அமைத்திருப்போம்.

1996-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக அரசியலில் ஆளுங்கட்சிக்கு எதிராக வீசிய அலையையும் மீறி, நான்கு இடங்களில் வென்றோம். 2001-ஆம் ஆண்டில் 20 இடங்கள், 2006-ஆம் ஆண்டில் 18 இடங்கள் என பாட்டாளி மக்கள் கட்சி வெற்றிப்பாதையில் தான் வலம் வந்து கொண்டிருந்தது. ஆனால், அதன் பின் வெற்றிகள் நமக்கு வசமாகவில்லை. 1996-ஆம் ஆண்டில் தனித்து 4 இடங்களை வென்ற நாம் கூட்டணி அமைத்தும் 5 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற முடிந்திருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று கண்டறிய வேண்டும்... உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு எனது 82-ஆவது பிறந்தநாளும், 83-ஆவது பிறந்தநாளும் வலிகள் மற்றும் வேதனைகளுடன் தான் கடந்து சென்றிருக்கின்றன. அப்போதும், எப்போதும் பாட்டாளி சொந்தங்கள் என் மீது காட்டிய பாசம் தான் என்னை வலிகளில் இருந்து மீட்டெடுத்திருக்கிறது. கண்களை இமை காப்பதைப் போன்று பாட்டாளி சொந்தங்கள் தான் என்னை பாதுகாத்து வருகின்றனர்.

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் அதை விட சிறந்த மகிழ்ச்சி இல்லை...

நினைத்ததெல்லாம் நடக்காவிட்டால் அதை நினைத்து முடங்கி விடத் தேவையில்லை.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும். (குறள் எண்- 619)

என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப வெற்றிகளை சாத்தியமாக்க அனைவரும் கடுமையாக உழைப்போம். அரசியல் இலக்கை அடைவோம் என்று அனைவருக்கும் தெவித்துக் கொள்கிறேன்.

பாட்டாளிகள் இல்லாமல் என் வாழ்க்கை இல்லை, தமிழ்ச்சொந்தங்கள் இல்லாமல் நான் இல்லை. என் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்காக உழைப்பதே எனது விருப்பமும், மகிழ்ச்சியும் ஆகும். இந்த பணியை நான் என்றும் தொடர்வேன் என்று எனது முத்துவிழாவில் நான் அளித்த வாக்குறுதியை மீண்டும் ஒருமுறை தமிழ்ச்சொந்தங்களுக்கு புதுப்பித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x