Published : 29 Oct 2023 04:06 AM
Last Updated : 29 Oct 2023 04:06 AM

போலீஸார் தாக்கி உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு ரூ.29 லட்சம் இழப்பீடு: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரையில் வாகனச் சோதனையின் போது, போலீஸார் லத்தியால் தாக்கி உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு ரூ.29 லட்சம் இழப்பீடு வழங்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வி.கஜ பிரியா என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் விவேகானந்த குமார். எங்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளான். கணவர் சிம்மக்கல்லில் டயர் கடை நடத்தி வந்தார். கடந்த 15.6.2019-ல் கடையை மூடிவிட்டு என் கணவரும், கடையில் வேலை பார்த்த சரவணக் குமார் என்பவரும் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

இருவரும் இரவு 11.30 மணியளவில் தத்தனேரி பாலத்தை கடக்கும் போது, அங்கு நின்றிருந்த போலீஸார் இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளனர். அப்போது போலீஸார் ஒருவர் லத்தியால் என் கணவரின் நெஞ்சில் ஓங்கி அடித்துள்ளார். இதில் நிலை குலைந்து கீழே விழுந்த என் கணவர் உயிரிழந்தார். நான் இளம் வயதில் கணவரை இழந்து ஒன்றரை வயது மகனுடன் தவிக்கிறேன். இதனால் எனக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி.தனபால் பிறப்பித்த உத்தரவு: போலீஸார் தாக்கியதில் மனுதாரர் கணவர் இறந்துள்ளார். இதனால் மனுதாரர் குடும்பத்துக்கு மொத்தம் ரூ.30 லட்சத்து 84 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். சம்பவத்தின் போது, மனுதாரரின் கணவர் தலைக் கவசம் அணியவில்லை. இதனால் இழப்பீட்டு தொகையில் 5 சதவீதம் கழித்து, ரூ.29 லட்சம் வழங்க வேண்டும்.

இழப்பீட்டுத் தொகையில் மனுதாரருக்கு ரூ.10 லட்சம், மனுதாரரின் மகனுக்கு ரூ.12 லட்சம், இறந்தவரின் தந்தைக்கு ரூ.7 லட்சம் வழங்க வேண்டும். மனுதாரரின் கணவர் உயிரிழந்த நாளிலிருந்து இழப்பீட்டுத் தொகை வழங்கும் நாள் வரை 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். ஏற்கெனவே இழப்பீடு வழங்கப்பட்டிருந்தால் கழித்துக்கொள்ளலாம்.

இழப்பீட்டுத் தொகையை உள்துறைச் செயலர், மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் 2 மாதத்தில் வழங்க வேண்டும். மனுதாரருக்கு அரசு வேலை வழங்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மனுதாரரின் அரசு வேலை கோரிக்கையை அரசு விதிப்படி முடிவு செய்யலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x