Published : 29 Oct 2023 04:04 AM
Last Updated : 29 Oct 2023 04:04 AM

தமிழகத்தில் வெங்காயம் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் கருத்து

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே பழைய பால் பண்ணை வெங்காய மண்டியில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள சின்ன வெங்காயம். படம்: ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: வரத்துக் குறைவால் விலை உயர்ந்து சின்ன வெங்காயம் ரூ.90 முதல் ரூ.110 வரையிலும், பெரிய வெங்காயம் ரூ.60 முதல் ரூ.64 வரையிலும் விற்கப்படுகிறது. இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் வெங்காய மண்டிக்கு மகாராஷ்டிர மாநிலம் நாசிக், சோளாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அறுவடை செய்யப்படும் பெரிய வெங்காயம் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை விற்பனைக்கு வரும். அதேபோல, கர்நாடகா மாநிலம் பெங்களூரு, மைசூரு, பெல்லாரி உள்ளிட்ட பகுதிகளில் 2-ம் போகம் அறுவடை செய்யப்படும் பெரிய வெங்காயம், நவம்பர், டிசம்பர் மாதங்களில் விற்பனைக்கு வரும்.

மேலும், கர்நாடகா மாநிலம் மைசூரு, பெல்லாரி மற்றும் அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், தேனி ஆகிய பகுதிகளிலிருந்து சின்ன வெங்காயம் திருச்சிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். அறுவடை முடிவடைந்ததாலும், பருவ மழை தொடங்கியதாலும் சின்ன மற்றும் பெரிய வெங்காயம் வரத்து குறையத் தொடங்கி விலை ஏறத் தொடங்கி உள்ளது. சில்லறையில் ரகத்துக்கு ஏற்றார் போல ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.90 முதல் ரூ.110 வரையிலும், பெரிய வெங்காயம் ரூ.60 முதல் ரூ.64 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து வெங்காயம் மொத்த வியாபாரி ஜான் கூறியது: "மகாராஷ்டிரா, கர்நாடகாவிலிருந்து 960 டன் பெரிய வெங்காயமும், 240 டன் சின்ன வெங்காயமும் திருச்சி வெங்காய மண்டிக்கு நாள் தோறும் விற்பனைக்கு வரும். திருச்சி வெங்காய மண்டியிலிருந்து அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தேவக்கோட்டை, திண்டுக்கல் வரை விற்பனைக்கு அனுப்பப்படும்.

தற்போது 240 டன் பெரிய வெங்காயமும், 50 டன் சின்ன வெங்காயமும் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை பெரிய வெங்காயம் ரூ.2,500 முதல் ரூ.3,500 வரையும், சின்ன வெங்காயம் ரூ.3,000 முதல் ரூ.4,500 வரையும் மொத்த விலையில் சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறோம்.

மகாராஷ்டிரா சீசன் முடிந்தாலும், கர்நாடகாவிலிருந்து வர வேண்டிய வெங்காயம் வந்தால் தான் விலை குறையும். அங்கும் மழையால் பல இடங்களில் வெங்காயம் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் வெங்காயம் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x