Published : 27 Oct 2023 04:12 AM
Last Updated : 27 Oct 2023 04:12 AM
புதுச்சேரி: முதல்வருக்கு தெரியாமல் ஐஏஎஸ் அதிகாரி மாற்றம் தொடர்பாக சட்டப்பேரவை செயலகம் அளித்த நோட்டீஸூக்கு தலைமை செயலர் விளக்கம் தரவில்லை. இச்சூழலில் அவர் டெல்லி சென்றுள்ளார்.
புதுவை மாநில தலைமை செயலராக ராஜீவ் வர்மா உள்ளார். இவர் தன்னிச்சையாக செயல்படுவதாக ஆளும் கட்சி கூட்டணி எம்எல்ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் தலைமை செயலரின் செயல்பாடுகளை எம்எல்ஏ-க்கள் கடுமையாக விமர்சித்தனர்.
பேரவைத் தலைவர் செல்வமும், அரசுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் நிதி, கல்வி, தேர்தல் உள்ளிட்ட துறைகளை வைத்திருந்த அரசு செயலர் ஜவகரிடம் இருந்து தேர்தல் தவிர பிற துறைகள், புதிதாக வந்த ஐஏஎஸ் அதிகாரி மோரேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதல்வரிடம் கலந்து ஆலோசிக்காமல் தலைமை செயலர் தன்னிச்சையாக அரசு செயலரை மாற்றியதாக கூறப்படுகிறது.
இது ஆளும் கட்சி கூட்டணி வட்டாரத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அக். 19-ம் தேதி தலைமை செயலரை பேரவைக்கு அழைத்து கேள்வி எழுப்பினர். இந்நிலையில் தலைமை செயலர் திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். சட்டப்பேரவை செயலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ள சூழலில் அவர் இப்பயணம் சென்றுள்ளதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக பேரவைத் தலைவர் செல்வம் கூறுகையில், “புதுவை அரசின் ஒப்புதலின்றி ஐஏஎஸ் அதிகாரி ஜவகரின் பொறுப்புகள் மாற்றப் பட்டது. இது பற்றி தலைமை செயலரிடம் கேட்டபோது, முதல்வருக்கு தகவல் தெரிவித்ததாக பொய்யான தகவலை கொடுத்தார். இது குறித்து விளக்கம் கேட்டு சட்டப்பேரவை செயலகம் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் இதுவரை விளக்கம் தரவில்லை” என்று தெரிவித்தார்.
இது பற்றி புதுச்சேரி தலைமை செயலக வட்டாரங்களில் கேட்டதற்கு, டெல்லியில் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்கள் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளதாக தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT