Published : 20 Oct 2023 07:10 AM
Last Updated : 20 Oct 2023 07:10 AM
சென்னை: உலக விபத்து தினத்தை முன்னிட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு செய்யப்படும் முதலுதவி செயல்முறை விளக்கத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, முதலுதவி கையேட்டை வெளியிட்டு, முதலாண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
உலக விபத்து தினத்தை முன்னிட்டு சென்னை சட்டக்கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு அக்.11 முதல் 31-ம் தேதி வரை மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 5,356 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் 531 பேர் உள்ளனர். 5 பேர்உயிரிழந்துள்ளனர். வரும் நவம்பர், டிசம்பரில் 1,000 முதல் 1,500 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தால், விபத்துகளால் ஏற்படும் இறப்புகள் சரிபாதியாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ராஜஸ்தான் இளைஞர் அமைப்பு சார்பில் ‘திருப்தி’ எனும் திட்டத்தின்கீழ், ஸ்டான்லி மருத்துவமனையில் உள்நோயாளிகளின் உடனிருப்போர் 500 பேருக்குதினமும் மதிய உணவு வழங்கும் சேவையை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த எண்ணிக்கையை 2,000 ஆக உயர்த்த வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ, மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜி கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT