Published : 15 Oct 2023 04:26 AM
Last Updated : 15 Oct 2023 04:26 AM

அண்ணா, கருணாநிதி ஆட்சியில் மகளிர் முன்னேற்றம்: திமுகவின் மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி புகழாரம்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை நந்தனத்தில் நேற்று நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். உடன், ஜனநாயக கட்சியின் ஜம்மு காஷ்மீர் தலைவர் மெஹபூபா முஃப்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா, தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே, சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. டிம்பிள் யாதவ், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர்.படம்:எஸ். சத்தியசீலன்

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உண்மையாக உழைப்போம், வெற்றி நமதே என்று தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு திமுக சார்பில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுக மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி முன்னிலை வகித்தார். மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் வரவேற்றார்.

இம்மாநாட்டில் சோனியா காந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி (மக்கள் ஜனநாயக கட்சி), அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, பிஹார் மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் லெஷி சிங் (ஐக்கிய ஜனதா தளம்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனி ராஜா, டெல்லி சட்டப்பேரவை துணைத் தலைவர் ராக்கி பிட்லன் (ஆம் ஆத்மி கட்சி), திரிணமூல் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், சமாஜ்வாதி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் சோனியா காந்தி பேசியதாவது: ராஜீவ்காந்தி, வரலாற்று சிறப்புமிக்க 33 சதவீத இடஒதுக்கீட்டை பஞ்சாயத்து ராஜ் சட்டத்திலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் கொண்டு வந்தார். இந்த சட்டத் திருத்தங்கள் சமூகத்தின் அடித்தளத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, பெண்களுக்கு தலைமைப் பொறுப்புகளை அளித்து, பெரிய சமூக புரட்சிக்கு வித்திட்டன. ராஜீவ்காந்தியின் இந்த சட்டம் தான், இன்று நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வருவதற்கான அடிப்படையாக அமைந்தது.

மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருந்தாலும்கூட, இந்த சட்டம் என்று அமலுக்கு வரும் என்று தெளிவே இல்லாத நிலை உள்ளது. நாளை இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்துதான் இந்த சட்டத்தை நிறைவேற்றி தரும் என்ற சூழல் உள்ளது.

அண்ணா, கருணாநிதி தலைமையிலான அரசுகளின் திட்டங்கள், பெண்களின் வாழ்க்கையில் பல புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தின. அதன் அடிப்படையில்தான் இன்று தமிழ்நாடு, இந்தியாவே புகழும் வகையில் மகளிர் சமத்துவத்துக்கான ஒளி விளக்காகத் திகழ்கிறது.

கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான், காவல்துறையில் பெண்களின் பங்கை அவர்கள் உறுதி செய்தார்கள். இன்று காவல்துறையில் 4-ல் ஒரு பங்கு பெண்களாக இருப்பது எவ்வளவு பெருமைப்படக்கூடியது. கருணாநிதி செய்த மற்றொரு சீர் திருத்தம் அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது. அதன் விளைவாக அரசுப் பணிகளில் 30 சதவீதம் பெண்களாக இருந்தார்கள். இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு 40 சதவீதமாக உயர்த்தி பெண்களை பெருமைப்படுத்தி இருக்கிறது.

கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடி அரசின் நடவடிக்கைகள், நாம் செயல்படுத்திய திட்டங்கள், நாம் பெற்றுத் தந்த உரிமைகள், கடந்த 70 ஆண்டுகளில் நாம் செய்த நல்ல முயற்சிகளை எல்லாம் சீரழிக்கும் வகையில் உள்ளது.

பெண்களை ஒரு அடையாளச் சின்னமாக மாற்றி, பழமையிலும், மரபு வழியிலும் ஏற்கெனவே பின்பற்றி வரும் பாரம்பரிய சூழ்நிலைகளில் மட்டும்தான் பெண்கள் வாழ வேண்டும் என்று மத்திய அரசு எண்ணுகிறது. அவர்களுக்கான புதிய சுதந்திரத்தையும், உரிமைகளையும் அளிக்க தயாராக இல்லை.

இண்டியா கூட்டணி, இதுபோன்ற சமச்சீரற்ற தன்மைகளை நீக்கி, பெண்களுக்கு உண்மையாகவே ஒரு சமத்துவ உலகை உருவாக்கிக் கொடுக்கும் அவசர நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

சோனியா காந்தி தனது உரையை தொடங்கும்போது, ‘சகோதர சகோதரிகளே வணக்கம்’ என்று தமிழில் பேசியபோது, கூட்டத்தில் பங்கேற்றிருந்த மகளிர் கைத்தட்டி வரவேற்றனர். உரையை நிறைவு செய்யும்போது, வெற்றி நமதே, நன்றி என தமிழில் கூறியது, கூட்டத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் மேற்கொண்டிருந்தார். கட்சியின் மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ராணி நன்றியுரையாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x