Published : 14 Oct 2023 09:59 PM
Last Updated : 14 Oct 2023 09:59 PM

“பாஜகவை ஒற்றுமையால் மட்டுமே வீழ்த்த முடியும்” - ஸ்டாலின் பேச்சு @ திமுகவின் ‘மகளிர் உரிமை மாநாடு’

சென்னை: “பாஜகவை ஒற்றுமையின் மூலமாக மட்டுமே வீழ்த்த முடியும். இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்பதன் மூலமாக மகளிர் உரிமை மட்டுமல்ல, அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்கும் இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ஆற்றிய உரை: “பெண்ணினத்தின் எழுச்சியின் அடையாளமாக, இந்த மாநாட்டை ஒரு ‘மாநில மாநாடு’ போல் ஏற்பாடு செய்து, இதை எழுச்சியோடு நடத்திக் கொண்டிருக்கிறார் நம்முடைய தங்கை கனிமொழி. கர்ஜனை மொழியாக - கனல் மொழியாக இப்போது நாடாளுமன்றத்தில் முழங்கி வருவதைப் பார்க்கும்போது, திமுக தலைவராக மட்டுமல்ல, அண்ணனாகவும் நான் மிகுந்த பெருமை அடைந்து வருகிறேன்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருக்கும் பெரும்பாலான மாநிலத்தைச் சேர்ந்த பெண் தலைவர்களை அழைத்து வந்து, ஏற்றத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு, தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடாக மட்டுமல்ல, இந்தியப் பெண்களின் மாநாடாக அமைந்துள்ளது என்பதை நான் பெருமையோடு பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன். இதுவரை ‘சென்னை சங்கமம்’ நடத்திக் காட்டிய தங்கை கனிமொழி, இப்போது இந்தியச் சங்கமத்தை நடத்திக் காட்டி இருக்கிறார். இதுதான் வித்தியாசம்.

இவை அனைத்துக்கும் மகுடம் வைப்பது போல அன்னை சோனியா காந்தி வருகை தந்துள்ளார்கள். ‘நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சியைத் தருக!’ என்று 1980-ஆம் ஆண்டு இந்திரா காந்தியைச் சுட்டிக்காட்டிச் சொன்ன கருணாநிதி, 2004-ஆம் ஆண்டில், ‘இந்திராவின் மருமகளே வருக! இந்தியாவின் திருமகளே வெல்க!’ என்று வரவேற்றுச் சொன்னார். கருணாநிதி சொன்னதைப் போலவே நாம் நாற்பதுக்கு நாற்பது வெல்ல, அகில இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றது. அப்போது தனக்காக காத்திருந்த பிரதமர் பதவியை மறுத்து இந்திய அரசியல் வானில் ஒரு கம்பீரப் பெண்மணி என நின்றவர் சோனியா காந்தி.

அப்போது சோனியா காந்திதான் ஆட்சிக்குத் தலைமை வகித்து பிரதமராக வேண்டும் என்று முன்மொழிந்தவர் கருணாநிதி என்பது வரலாறு. கருணாநிதி நம்மை விட்டுப் பிரிந்து அவர் ஓய்விடத்துக்குச் சென்றபோது, சோனியா காந்தி எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் அவர், ‘கருணாநிதியின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு. என் மீது அவர் எப்போதுமே மிகுந்த கனிவும் அக்கறையும் கொண்டிருந்ததை நான் எப்போதுமே மறக்க இயலாது. அவர் எனக்கு ஒரு தந்தையைப் போன்றவர்’ அத்தகைய ஆழமான குடும்பப் பாச நட்பைக் கொண்டவர் அன்னை சோனியா காந்தி. அவரும் - இளம் அரசியல் ஆளுமையாக மிளிரும் அருமைச் சகோதரி பிரியங்கா காந்தியும் இங்கு வந்திருப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

தன்னிகரில்லா மெஹபூபா முப்தி ஒரு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர். சுப்ரியா சுலே எழுந்தாலே நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வினர் அஞ்சி நடுங்குவார்கள். பிஹாரில் இருந்து அருமை நண்பர் நிதிஷ்குமாரின் குரலை எதிரொலிக்க லெஷி சிங் வந்திருக்கிறார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எண்ணத்தைச் சொல்வதற்கு டெல்லி சட்டப்பேரவை துணைத் தலைவர் ராக்கி பிட்லன் வந்திருக்கிறார். சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அருமை நண்பர் அகிலேஷ் யாதவ் மனைவியுமான டிம்பிள் யாதவ், அக்கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவர் ஜூஹி சிங் வருகை தந்துள்ளார்கள்.

மேற்கு வங்கப் பெண் சிங்கம் மமதா பானர்ஜியின் பிரதிநிதியாக சுஷ்மிதா தேவ் வருகை தந்துள்ளார். இடதுசாரி இயக்கங்களின் பிரதிநிதியாக சுபாஷினி அலியும், ஆனி ராஜாவும் இடம்பெற்றுள்ளார்கள். எனவே இந்த மேடையே இந்தியா கூட்டணியாக காட்சியளிக்கிறது. மேடையில் இருக்கும் தலைவர்கள் அனைவருக்கும் நான் வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்.

பாஜகவை ஒற்றுமையின் மூலமாக மட்டுமே வீழ்த்த முடியும். தமிழ்நாடு இதை 2019 தேர்தல் முதலே நிரூபித்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ளது போல ஒன்றுபட்ட கூட்டணி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட வேண்டும். பா.ஜ.க.வை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் நமக்கிடையேயான சிறிய வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு நின்றால், நம்மால் நிச்சயம் இந்திய மக்களுக்கு எதிரான சக்தியான பா.ஜ.க.வை வீழ்த்த முடியும். இங்கே வருகை தந்துள்ள சகோதரிகள் இந்தச் செய்தியை உங்கள் கட்சித் தலைவர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பாரதிய ஜனதா கட்சியைத் தோற்கடிப்பது என்பது, இந்தியாவில் இயங்கும் அனைத்து ஜனநாயக சக்திகளின் வரலாற்றுக் கடமை! மகளிர் உரிமையைக் காக்க மாநாடு கூட்டி இருக்கிறார் கனிமொழி. மகளிர் உரிமை மட்டுமா? பாஜக ஆட்சியில் அனைத்து மக்களது உரிமைகளும் பறிக்கப்பட்டு விட்டது. இன்றைக்கு நாம் பார்க்கும் நாடாளுமன்ற அமைப்பு முறை இருக்குமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களாட்சி இருக்குமா? என்ற கேள்வி பெரிதாக எழுந்து வருகிறது.

ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே மதம் - ஒரே பண்பாடு - ஒரே தேர்தல் - ஒரே தேர்வு - ஒரே உணவு என்ற பெயரால் ஒற்றைக் கட்சி ஆட்சியைக் கொண்டு வரப்பார்க்கிறார் பிரதமர் மோடி . அது நடந்தால், ஒரே மனிதர் என்ற எதேச்சாதிகாரத்துக்கு அது வழிவகுக்கும். எனவேதான் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை முற்றிலுமாகத் தோல்வி அடையச் செய்ய வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பெண்களை ஏமாற்ற, மகளிருக்கு நாடாளுமன்றம் - சட்டமன்றங்களில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்று சட்டம் கொண்டு வந்ததைப் போல ஏமாற்றுகிறார்கள். இங்கு உரையாற்றிய அத்தனை பேரும் மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். எனவே நான் அதிகம் விளக்கம் சொல்ல விரும்பவில்லை. 33 விழுக்காடு இடஒதுக்கீடு பெண்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்ற சதி எண்ணத்தோடுதான் இந்தச் சட்டத்தையே பா.ஜ.க. கொண்டு வந்திருக்கிறது என்று நான் கருதுகிறேன். அப்படித்தான் எல்லோருக்கும் எண்ணம் வருகிறது.

‘நடைபெற இருக்கும் நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும்’ என்று இந்த சட்டம் சொல்லி இருந்தால் பிரதமர் நரேந்திர மோடியை நாமெல்லாம் பாராட்டலாம். மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிந்த பிறகு - அதை வைத்து தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு - என்று சொல்கிறார்கள். பழைய படங்களில் “என் கையில் உள்ளதை நான் தரவேண்டுமானால் ஏழு மலையைச் சுற்றி வா! ஏழு கடலைச் சுற்றி வா!” என்று பூதம் சொல்வதாகக் கதை சொல்வார்கள் அல்லவா? அது போன்ற கப்சா சட்டத்தை மோடி நிறைவேற்றி விட்டு, பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு கொடுத்துவிட்டதாக பிரதமர் சொல்லிக் கொள்கிறார்.

2029-ஆம் ஆண்டுதான் இந்த இடஒதுக்கீடு கிடைக்கும் என்றும், 2034-ஆம் ஆண்டு கூட ஆகலாம் என்றும் கணக்கிட்டுச் சொல்கிறார்கள். எதுவாக இருந்தாலும் 2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள். 1996-ஆம் ஆண்டு தி.மு.க. - காங்கிரஸ் ஆதரித்த ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டபோது இந்த நிபந்தனைகளை நாம் விதிக்கவில்லை. 2010-ஆம் ஆண்டும் நமது கூட்டணி அரசு இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்தபோதும் இது மாதிரியான நிபந்தனைகளை விதிக்கவில்லை. இப்போது பா.ஜ.க. நிபந்தனை போடுகிறது என்றால் அவர்கள் உண்மையான அக்கறையுடன் இதனை கொண்டு வரவில்லை.

மகளிர் எந்த உரிமைகளையும் பெற்றுவிடக் கூடாது, வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று நினைக்கும் கட்சிதான் பா.ஜ.க. சோனியா காந்தி, பிரியங்கா காந்தி இந்த மேடையில் இருக்கிறார்கள். இங்கு ஒரு விஷயத்தை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். அவரே பேசுகிறபோது சொன்னார், பிரதமர் ராஜீவ் காந்தி தான், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை முதன்முதலாக உறுதி செய்தார்.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை முதன்முதலாக 1996-ஆம் ஆண்டு வழங்கியவர் கருணாநிதி. இப்போது உள்ளாட்சியில் 50 விழுக்காட்டில் பெண்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். பா.ஜ.க. கொண்டு வந்த சட்டத்தில், இன்னொரு முக்கியமான விஷயம், இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கும் - சிறுபான்மையின பெண்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கவில்லை. அப்படி வழங்கினால்தான் ஏழை எளிய - விளிம்பு நிலை மக்களின் குரல் சட்டமன்றத்திலும் - நாடாளுமன்றத்திலும் ஒலிக்கும். அப்படி ஒலித்துவிடக் கூடாது என்று பா.ஜ.க. நினைக்கிறது.

இதை பா.ஜ.க.வின் அரசியல் தந்திரமாக மட்டுமல்ல, அரசியல் சதியாகவும்தான் பார்க்க வேண்டியுள்ளது. இதனை நாம் சுட்டிக் காட்டினால், ஒரு அரிய கருத்தைப் பிரதமர் அள்ளி விடுகிறார். அதாவது, பெண்களை சாதிரீதியாகப் பிளவுபடுத்தப் பார்க்கிறோமாம். சாதிரீதியாக, மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்துவது யார் என அனைவருக்கும் தெரியும். இடஒதுக்கீடு நாம் கேட்கிறோம் என்றால், சாதிரீதியாகப் பிரிப்பதற்காகவா கேட்கிறோம் என்பதல்ல.

அனைத்து மகளிரும் எல்லாவித உரிமைகளும் பெற்றவர்களாக உயர வேண்டும் என்பதற்காகத்தான். இதை விட்டுக் கொடுத்துவிட்டால் - அடுத்தடுத்து சமூகநீதியைக் காவு வாங்கி விடுவார்கள். எந்தச் சூழலிலும் சமூகநீதியை நாம் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது. இதுதான் நமக்கு இருக்க வேண்டிய உறுதி. ராகுல் காந்தி சமூகநீதிக் குரலைத் தான் தொடர்ந்து எதிரொலித்து வருகிறார். இந்தியா கூட்டணி என்பது தேர்தல் கூட்டணியாக மட்டுமல்ல - கொள்கைக் கூட்டணியாக அமைந்துள்ளது.

சமூகநீதி - மதச்சார்பின்மை - மாநில சுயாட்சி - கூட்டாட்சிக் கருத்தியல் அனைவருக்குமான அரசியல் பங்கீடு என்ற கோட்பாடுகளைக் கொண்டதாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்பதன் மூலமாக மகளிர் உரிமை மட்டுமல்ல - அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்கும் இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்.

சொத்தில் சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு, ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக பெண்களைத்தான் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற சட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித் தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், ஒரு ஏழை-எளிய குடும்பத்தில் பிறந்திருக்கும் பெண்ணுக்கு திருமணம் என்றால், அந்தப் பெண்ணுக்கு நிதி உதவி செய்யும் ஒரு அற்புதமான திட்டம், இப்போது மகளிர் உரிமைத் தொகை – கடந்த மாதம் 15-ஆம் தேதி, 14-ஆம் தேதி இரவே சென்று சேர்ந்துவிட்டது. இந்த மாதம் 14-ஆம் தேதி இரவே வந்து சேரப்போகிறது. எனவே மாதாமாதம் ஆயிரம் ரூபாய். உதவித் தொகை அல்ல, பெண்களே… அது உங்களுக்கு இருக்கும் உரிமைத் தொகை. மறந்து விடாதீர்கள்.

பேருந்துகளில் விடியல் பயணம், பெண் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் நியமனம் - இப்படி தமிழ்நாட்டு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டும் நமது திராவிட மாடல் கொள்கைகள் இந்தியா முழுமைக்கும் பரவும் நாளே, மகளிர் உரிமை பெற்ற நாளாக அமையும். அதற்கான அடித்தளத்தை உருவாக்கும் இந்த மாநாட்டை நடத்திக் காட்டியிருக்கும் என்னுடைய அருமை தங்கை கனிமொழிக்கும் – அவருக்கு துணை நின்ற மகளிரணி நிர்வாகிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகள், பாராட்டுகள். INDIA கூட்டணி வெல்க!” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x