Published : 09 Oct 2023 05:26 PM
Last Updated : 09 Oct 2023 05:26 PM

சட்டப்பேரவையில் மதுபான விதி திருத்தங்கள் தாக்கல்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் இன்று (அக்.9) சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள், ஹோட்டல்கள், அதை சார்ந்த பார்கள் ஆகியவற்றுக்கு உரிய உரிமத்துடன் மதுபான விற்பனை மற்றும் பரிமாறுதல் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் எஃப்.எல்.12 என்ற புதிய உரிமத்தை தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த எஃப்.எல்.2 சிறப்பு உரிமமானது, மதுபானங்களை இருப்பு வைத்து, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் மாநாடுகள், நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கொண்டாட்டங்கள், திருவிழாக்களில், விருந்தினர்கள், பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு பரிமாறுவதற்காக வழங்கப்படுகிறது.

கருத்தரங்க அரங்கம், மாநாட்டுக் கூடங்கள், திருமண அரங்கங்கள், விருந்து அரங்கம் ஆகியவற்றில் மதுபானங்களை இருப்பு வைத்து விநியோகிக்கவும் சிறப்பு உரிமம் அனுமதிக்கும் என தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்த பின்னர், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் பாலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் வழங்க வகை செய்யும் வகையில் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டதா என தெரிவிக்கும்படி அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மதுபான சட்ட திருத்த விதிகள், சட்டமன்றத்தில் இன்று (அக்.9) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, நிகழ்ச்சி நிரலை சமர்ப்பித்தார்.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனு இன்று தான் வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணையை அக்டோபர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதுவரை திருத்த விதிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்தும் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x