Published : 09 Oct 2023 03:41 PM
Last Updated : 09 Oct 2023 03:41 PM

காவிரியில் தண்ணீர் திறக்க தனித் தீர்மானம்: தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை: தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்.9) தொடங்கியது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வினாக்கள் விடைகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

பின்னர், "தமிழக விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி" தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து, அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, பாமக சார்பில் ஜி.கே.மணி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் செல்வப்பெருந்தகை, புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் ஜெகன் மூர்த்தி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஜவாஹிருல்லாஹ், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கே.மாரிமுத்து, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகை மாலி, விசிக சார்பில் சிந்தனை செல்வன், ஆகியோர் முதல்வர் கொண்டுவந்த தனித்தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர்.

இத்தீர்மானம் முழுமையானதாகவும், நிரந்தர தீர்வை நோக்கியதாகவும் இல்லை எனக் கூறி பாஜக சார்பில் வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து, பேரவையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x