Last Updated : 09 Oct, 2023 03:10 PM

 

Published : 09 Oct 2023 03:10 PM
Last Updated : 09 Oct 2023 03:10 PM

பறவைகளும் வாழ வழி செய்வோம்! - 108 கி.மீ சைக்கிளில் பயணித்து ஒரு வித்தியாச முயற்சி

பறவைகளுக்கான மண்பானை கூடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் சத்ய நா ராயணனிடம் ஒப்படைக்கும் மாணவர் சபரிவேலன்.

கள்ளக்குறிச்சி: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பலர் பலவிதமான முன்னெடுப்புகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பறவைகள் வந்து தங்கிச் செல்லும் வகையிலான மண்பானையுடன் இணைந்த கூடு பெட்டிகளை கொண்டு வந்துவைக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளார் 7 - ம்வகுப்பு பயிலும் சபரி வேலன் என்ற மாணவர்.

இவர், இதற்காக கடலூர் மாவட்டத்தில் இருந்து சைக்கிளில் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கி சுமார் 108 கி.மீ பயணித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு அதே நாளில் மாலை 4 மணியளவில் வருகை தந்தார்.

50 எண்ணிக்கையிலான மண்பானை பறவை கூடுகளை கையோடு எடுத்து வந்த சபரிவேலன், மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணனிடம் அதை வழங்கினார்.

மாணவரின் இந்தச் செயல்பாடு குறித்து அங்கிருந்த அரசு அலுவலர்கள் பேசுமாறு கூற, அப்போது பேசிய சபரிவேலன், “இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்குமானது. அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கான வாழ்விடத்தை உருவாக்கி தர வேண்டிய பொறுப்பு, இச்சமூகத்தை முன்னெடுத்துச் செல்லும் மனிதர்களான நமக்கு உள்ளது.

இது நமது கடமையும் ஆகும். அனைத்து உயிரினங்களைப் பேணுவதன் மூலம் சூழியல் சங்கிலியின் இயல்புதன்மை எப்போதும் மாறாமல் இருக்கும். அதன் மூலம் இந்த உலகம் பாதுகாக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மாணவனின் இச்செயலையும், இதற்கு உறுதுணையாக இருந்த குயிலி அமைப்பு, தியா அறக்கட்டளை மற்றும் கடலூர் ரைடர்ஸ் கம்யூனிட்டி அமைப்பினரையும் மாவட்ட நிர்வாகத்தினர் பாராட்டினர். பறவைகளை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி சபரிவேலன் இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார் என்று அப்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

மாணவர் சபரிவேலன் எடுத்து வந்திருக்கும் இந்த மண் பானைகளிலான பறவைக் கூடுகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகம் உள்ளிட்ட அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள மரக்கிளைகளில் பொருத்த உள்ளனர். நிகழ்வு தொடங்கிய நேற்று முன்தினம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மரக்கிளைகளில் மண்பானை பறவை கூடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன் பொருத்தினார். இந்நிகழ்வில் குயிலி அமைப்பு நிறுவனர் எஸ்.கீர்த்தி, தியா அறக்கட்டளை நிறுவனர் அமர்நாத் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x