Published : 09 Oct 2023 03:18 PM
Last Updated : 09 Oct 2023 03:18 PM

காவிரி பிரச்சினை | “ஆம் ஆத்மி போல இண்டியா கூட்டணியை ஸ்டாலின் அணுகுவாரா?” - தமிழக பாஜக

தருமபுரி: “ஆம் ஆத்மி கட்சியைப் போன்று இண்டியா கூட்டணியை வலியுறுத்தி, தமிழக நலனை நிலைநாட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வருவாரா?” என்று பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தருமபுரி மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனைக் கூட்டம், தருமபுரியை அடுத்த ஒட்டப்பட்டியில் இன்று (அக்.9) நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னதாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கே.பி.ராமலிங்கம் கூறியது: ''பாரதிய ஜனதா கட்சி தேசியத்தையும், தெய்வீகத்தையும் முன்னிறுத்தி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இதற்காக கட்சியின் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற நாடுகளுக்கெல்லாம் தலைமை தாங்கும் நிலைக்கு பாரத தேசம் உயர்ந்துள்ளது.

நமது பிரதமர் மோடியால் வல்லரசு நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் நம் நாடு வெற்றிநடை போட்டு வருகிறது. ஊழலற்ற திறமையான நிர்வாகத்தை அவர் வழங்கி வருகிறார். தான் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியின் பெருமையை அவர் குறிப்பிட்டு பேசி வருகிறார். மக்களின் குலதெய்வ கோயில்களைக் கூட அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வரும் கோயில்களாக மாற்றி அவற்றின் வருமானத்தையும் தமிழக அரசு கொள்ளையடித்து வருகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் யார் ஆட்சியில் இருந்தாலும் கூட, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மட்டும் தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் வழங்குவதில் அரசியல் செய்யப்படுகிறது. அதேநேரம், அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி அப்போதைய கர்நாடகா முதல்வர் பொம்மையிடம், காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு வலியுறுத்தினார். இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காவிரி நீர் உரிமைக்காக மேல்முறையீடு மட்டும்தான் செய்து வருகிறார். டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தொடர்பான கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே கூட்டணியில் தொடர்வோம் என வலியுறுத்தி அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். காவிரி பிரச்சனை தொடர்பாக இப்படியொரு கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணியிடம் முன்வைத்து வலியுறுத்தி தமிழக நலனை நிலைநாட்டுவாரா?'' என்று அவர் கூறினார். கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x