Published : 08 Oct 2023 01:07 PM
Last Updated : 08 Oct 2023 01:07 PM

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 107 பதக்கங்கள்: இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: "107 பதக்கங்களை அள்ளியதன் மூலமாக அபாரமான திறன், உறுதி மற்றும் அர்ப்பணிப்பை நமது விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த நமது வீரர்களுக்குச் சிறப்பு பாராட்டுகளை உரித்தாக்குகிறேன். உங்களின் தனிச்சிறப்பான பங்களிப்பால் உலக அரங்கில் நமது மாநிலத்துக்குப் பெருமிதம் பொங்கச் செய்துள்ளீர்கள்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட இந்திய அணியினருக்கு எனது பாராட்டுகள்.

107 பதக்கங்களை அள்ளியதன் மூலமாக அபாரமான திறன், உறுதி மற்றும் அர்ப்பணிப்பை நமது விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தடகள சாம்பியன்கள், கூர்மிகு வில்வித்தையர்கள், சீற்றமிகு கபடி அணியினர், இறகுப்பந்து நட்சத்திரங்கள் என இந்தியாவின் பலதரப்பட்ட திறமையாளர்களும் பெரிதும் இத்தொடரில் மின்னியுள்ளனர்.

குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த நமது வீரர்களுக்குச் சிறப்பு பாராட்டுகளை உரித்தாக்குகிறேன். உங்களின் தனிச்சிறப்பான பங்களிப்பால் உலக அரங்கில் நமது மாநிலத்துக்குப் பெருமிதம் பொங்கச் செய்துள்ளீர்கள்.

இத்தகைய சிறப்பான பங்களிப்புடன் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களது முயற்சிகளும் சாதனைகளும் இங்கு இன்னும் பலரை ஊக்கப்படுத்தி வருகிறது. இந்திய அணி, வெகு சிறப்பு" என்று முதல்வர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஆசிய விளையாட்டு போட்டியின் 14-வது நாளான நேற்று பதக்க பட்டியலில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என 107 பதக்கங்களை குவித்து 4-வது இடத்தில் தொர்ந்து நீடித்தது. ஆசிய விளையாட்டு வரலாற்றில் 100-க்கும்மேற்பட்ட பதக்கங்கங்களை இந்தியா வெல்வது இதுவே முதன்முறையாகும். இதற்குமுன்னர் கடந்த 2018-ம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்தியா அதிகபட்சமாக 70 பதக்கங்கள் வென்றிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x