Published : 06 Oct 2023 08:49 PM
Last Updated : 06 Oct 2023 08:49 PM

“தமிழகத்தில் மக்களவைத் தொகுதி எண்ணிக்கையை குறைக்க சதி” - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

தஞ்சாவூர்: “தமிழகத்தில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தியதற்குத் தண்டனையாக, மக்களவைத் தொகுதி எண்ணிக்கையை குறைக்கப் போகிறார்கள்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் 'கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா’ நடத்தப்பட்டது. இதே விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொகுத்துள்ள “தாய்வீட்டில் கலைஞர்” நூலும் வெளியிடப்பட்டது. இதில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “எனக்கு கொள்கை வழிகாட்டியாக இருப்பவர், கி. வீரமணி. அதனால்தான், 'நான் போகவேண்டிய பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்' என குறிப்பிடுகிறேன். தி.க.வும் - தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார் பேரறிஞர் அண்ணா. தி.க.வும் - தி.மு.க.வும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்றார் கலைஞர். என்னைப் பொறுத்தவரையில், தி.க.வும் - திமுக-வும் உயிரும் உணர்வும் போல” என்று பேசினார்.

தொடர்ந்து, “தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிய மாநிலமாக மட்டுமல்ல, தன்னிறைவு பெற்ற மாநிலமாக உயர வேண்டும். இந்திய ஒன்றிய அரசின் ஆட்சிக் கருத்தியலாக, கூட்டாட்சிக் கருத்தியல் மலர வேண்டும். அனைத்து தேசிய இனங்களும் உரிமை பெற்றவைகளாகவும், அனைத்து மாநில மொழிகளும் ஒன்றிய ஆட்சி மொழியாக உயர்ந்து நிற்க வேண்டும். அனைவர் குரலுக்கும் ஒரே மரியாதையும் மதிப்பும் இருக்க வேண்டும். இதுதான் இந்திய ஒன்றியமும், அதில் உள்ளடங்கிய தமிழ்நாடும் இயங்க வேண்டிய முறை. அத்தகைய கூட்டாட்சிக் கருத்தியலை உள்ளடக்கிய இந்தியாவை அமைப்பதற்காகவே இண்டியா கூட்டணியை அமைத்துள்ளோம்.

இது அரசியல் கூட்டணி அல்ல; கொள்கைக் கூட்டணி. தேர்தல் வெற்றியை மட்டும் கணக்கில் கொண்டு இதனை நாங்கள் உருவாக்கவில்லை. அந்த வெற்றிக்குப் பின்னால் அமையப் போகும் ஆட்சியில் கோலோச்ச வேண்டிய கொள்கைகளை மனதில் வைத்தே நாங்கள் செயல்படுகிறோம்.

தமிழ்நாடு இதுவரை இழந்த அனைத்து உரிமைகளும் மீட்கப்படும். மீட்கப்பட்டே தீர வேண்டும். கல்வி உரிமை, நிதி உரிமை, சமூகநீதி உரிமை, மொழி உரிமை, இன உரிமை, மாநில சுயாட்சி உரிமை ஆகிய அனைத்தையும் மீட்போம். தமிழ்நாட்டின் நாடாளுமன்ற மக்களாட்சி உரிமைக்குக் கேடு விளைவிக்கப் பார்க்கிறார்கள்.

மக்கள் தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி, நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையைக் குறைக்கும் சதிச்செயலை அரங்கேற்றப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தியதற்குத் தண்டனையாக, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி எண்ணிக்கையை குறைக்கப் போகிறார்கள். 39 எம்.பி.க்கள் தமிழ்நாட்டில் இருந்து செல்கிறார்கள் என்றால் நம்முடைய உரிமையை எடுத்துச் சொல்ல - உரிமையை நிலைநாட்டச் செல்கிறார்கள் என்று பொருள். இந்த எண்ணிக்கையானது கூட வேண்டுமே தவிர, குறையக் கூடாது.

அதேபோல் மகளிருக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டையும் பா.ஜ.க. முழு ஈடுபாட்டுடன் கொண்டு வரவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்தபிறகு, தொகுதி வரையறை முடிந்த பிறகு என்று சொல்வதே இதை நிறைவேற்றாமல் இருக்கும் தந்திரம்தான். அதிலும் குறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மகளிர் இடஒதுக்கீட்டை வழங்க மறுப்பது என்பது பா.ஜ.க.வின் உயர் வகுப்பு மனோபாவம். காலப்போக்கில் பட்டியலின இடஒதுக்கீட்டையும் காலி செய்துவிடும் ஆபத்தும் இதில் இருக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x