Published : 04 Oct 2023 05:43 AM
Last Updated : 04 Oct 2023 05:43 AM

கிராம ஊராட்சிகளில் 'முடங்கிய' திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்: ஆய்வுக்கு உட்படுத்துமா ஈரோடு நிர்வாகம்?

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபாளையம் ஊராட்சியில் செயல்படாமல் கிடக்கும் குப்பை தரம் பிரிக்கும் மையம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் கூடம். (கோப்பு படம்)

ஈரோடு: ஈரோடு மாவட்ட கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் முறையாக செயல்படுத்தப் படாததால், சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு, நீர்நிலைகள் மற்றும் காற்று மாசு அடைவது அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள கிராமங்களில், தூய்மைப்பணியை செம்மையாக்கும் வகையில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிராமத்தின் தெருக்களில் குப்பைகள் குவிவதைத் தடுக்கவும், குப்பைத்தொட்டி வைத்து ஓரிடத்தில் அவற்றை சேர்ப்பதால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேட்டை தடுக்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, தூய்மைப்பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து பெற்று வருகின்றனர்.

ஊராட்சிகள் தோறும் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில், ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுகிறது. 150 வீடுகளுக்கு ஒரு தூய்மைக் காவலர் மற்றும் 300 வீடுகளுக்கு மூன்று சக்கர வாகனம் எனத் திட்டம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மக்கும் குப்பைகளைப் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிக்க, ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இந்த மண்புழு உரத்தினை மலிவு விலையில் வழங்குவது திட்டத்தின் நோக்கமாகும்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளிலும் இந்த திட்டம் நடைமுறையில் இருந்தாலும், திட்டத்தின் செயல்பாடுகள் முடங்கி உள்ளன. ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா 2 லட்சம் வீதம் ரூ.5 கோடிக்கு மேல் செலவிடப்பட்டும், திட்டத்தின் நோக்கம் செயல்படவில்லை.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் வீடுகளில் குப்பைகளைச் சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்களில் பலர், முறையாக பணிக்கு வருவதில்லை. சேகரிக்கும் குப்பைகளை முறையாக தரம் பிரிப்பதில்லை.

மாறாக, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை ஒட்டிய, ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளால், நீர்நிலைகள் மாசடைந்து வருகிறது. பல இடங்களில் குப்பைகளை எரிப்பதால், மாசு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகளை மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் சாப்பிடுவதால், அவற்றுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறப்பு வரை செல்கிறது. குப்பைகள் முறையாக அகற்றப்படாததால், சுகாதாரம் பாதிக்கப்பட்டு, தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படாததால், குப்பை பிரிக்கும் இடம், மண்புழு தயாரிக்கும் இடம் ஆகியவை சமூக விரோத செயல்களுக்கான கூடாரமாக மாறி விடுகிறது. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஊராட்சி வாரியாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டால் உண்மை நிலை தெரியவரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தூய்மைப்பணியாளர்கள் தரப்பில் கூறியதாவது: ஊராட்சிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட குப்பை சேகரிக்கும் வாகனங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இவற்றை பழுதுநீக்கி தர வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கும் நடைமுறையைப் பின்பற்றுவதில்லை. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குப்பைக்கிடங்குகள், உரக்கிடங்குகளுக்கான கட்டமைப்பு வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்துகொடுக்க வேண்டும். எங்களின் ஊதியத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும், என்றனர்.

ஈரோடு மாவட்ட கிராம ஊராட்சிகளின் பொறுப்பு அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: ஈரோடு மாவட்ட ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சில இடங்களில் குப்பைகளை பிரிக்காமல் தீ வைத்து எரிப்பதாக புகார் வருகிறது. அது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மக்காத குப்பைகளைப் பொறுத்தவரை ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தமாக சேகரிக்கப்பட்டு, சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மக்கும் குப்பைகளை மண்புழு உரமாக மாற்றும் நடைமுறைக்கு சில இடங்களில் மட்டுமே வரவேற்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x