Published : 01 Oct 2023 04:12 AM
Last Updated : 01 Oct 2023 04:12 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரியவகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு, 80 நாட்களுக்கு மேல் செயற்கை சுவாசத்தில் இருந்த இளைஞரை பூரண குணம் அடையச் செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இது தொடர்பாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் கூறியதாவது: தென்காசியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (32) என்பவர் காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது கை கால்கள் திடீரென்று செயலிழந்தன. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூன் 17-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு Guillain Barre Syndrome என்ற அரியவகை நரம்பியல் நோய் பாதித்துள்ளதை கண்டுபிடித்தனர். இவருக்கு சிகிச்சை தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே சுவாசக் கோளாறு ஏற்பட்டு செயற்கை சுவாசம் வழங்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டார். அவரை அதிதீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் அனுமதித்து பிலாஸ்மா பெரசிஸ் என்ற உயர்ரக மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
ஆனாலும் அவருக்கு கை கால்கள் மற்றும் சுவாசத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மருத்துவக் கல்லூரியின் பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்கள் குழுவை நியமித்து தொடர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மருத்துவக் குழு 80 நாட்களுக்கு மேலாக அளித்த தீவிர சிகிச்சையின் காரணமாக தற்போது அந்த இளைஞரின் உடல்நிலை தேறி, இயல்பாக சுவாசிக்கும் தன்மையை பெற்றுள்ளார்.
மேலும் சாதாரண மனிதர்களைப்போல நடமாடும் நிலைக்கும் உடல் முன்னேற்றம் அடைந்துள்ளது. அரிய வகை நோய் பாதிக்கப்பட்ட நபரை சாதாரண மனிதரைப்போல் நடமாடச் செய்த மருத்துவர்களின் முயற்சி மிக அரிதான நிகழ்வாகும். மிக நீண்ட நாட்கள் செயற்கை சுவாசத்தில் இருந்த நபர் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதில் இவரே முதல் நபர் ஆவார்.
இதற்கு முன் இந்த நோய் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்கள் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டதில் உலக அளவில் மீண்டவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதே சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்தால் வெண்டி லேட்டர் சுவாசத்துக்கு மட்டும் ரூ.40 லட்சம் வரை செலவு செய்யும் நிலை உருவாகி இருக்கும். மொத்தமாக ரூ.1 கோடி வரை செலவிட வேண்டிய திருக்கும்.
ஆனால், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் தமிழக அரசு சார்பில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள அதி நவீன உபகரணங்கள் உதவியுடன் அளிக்கப்பட்ட சிகிச்சையின் காரணமாக இளைஞர் தற்போது மறுவாழ்வு பெற்றுள்ளார். இவ்வாறு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT