Published : 06 Dec 2017 05:31 PM
Last Updated : 06 Dec 2017 05:31 PM

விஷால் வேட்பு மனுவை மறுபரிசீலனை செய்யலாம்: முன்னுதாரணம் உள்ளதாக சமூக ஆர்வலர் செந்தில் ஆறுமுகம் பேட்டி

விஷால் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் மறு பரிசீலனை செய்யலாம். அப்படி மறுபரிசீலனை செய்த முன்னுதாரணங்கள் உண்டு என்று சட்டப்பஞ்சாயத்து இயக்க ஆர்வலர் செந்தில் ஆறுமுகம் ஆதாரத்துடன் பேட்டி அளித்தார்.

விஷால் வேட்புமனு நீண்ட இழுபறிக்குப் பின் தள்ளுபடி செய்யப்பட்டது. விஷால் வேட்புமனு தள்ளுபடிக்குக் காரணமாக தேர்தல் ஆணையம் கூறியிருப்பது முன் மொழிந்த இரண்டுபேர் தாங்கள் முன் மொழியவில்லை என்று கூறியதால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த குழப்பத்தின் காரணமாகமனு தள்ளுபடி செய்யப்படுவது சரியா? மீண்டும் மனுவை பரிசீலிப்பதற்கு வாய்ப்பே இல்லையா? என சட்டப்பஞ்சாயத்து இயக்க ஆர்வலர் செந்தில் ஆறுமுகத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

விஷால் மனு தள்ளுபடி செய்யப்பட்டதில் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன. இனி வாய்ப்பே இல்லை நீதிமன்றம்தான் செல்ல வேண்டும் என்பது சரியல்ல. தேர்தல் ஆணையம் மனுவை மீண்டும் பரிசீலிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்த முன்னுதாரணங்களும் உண்டு.

வேட்புமனுவை தள்ளுபடி செய்த பின்னர் மீண்டும் மறுபரிசீலனை செய்துள்ளார்களா?

ஆமாம். எங்களுக்கே சொந்த அனுபவம் உள்ளது. 2009-ம் ஆண்டு பர்கூர் இடைத்தேர்தலில் எங்கள் அமைப்பின் சார்பில் போட்டியிட்ட சிவ இளங்கோ மற்றும் தேமுதிக வேட்பாளர் சந்திரன் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பின்னர் ஆட்சேபனையை அடுத்து மீண்டும் பரிசீலனை செய்து ஏற்றுக்கொண்டார்கள்.

எந்த வகையான பிரச்சினை இருந்தது என்று தள்ளுபடி செய்தார்கள்?

எங்களது வேட்பாளர் திருவாரூரைச் சேர்ந்தவர், வேறு மாவட்டத்திலிருந்து வந்தவர் விஏஓ கடிதத்தை வைக்கவில்லை என்று தள்ளுபடி செய்தார்கள். தேமுதிக வேட்பாளரை முன் மொழிந்த 10 பேரின் வாக்காளர் எண் சரியாக இல்லை என்றும், அவரது கட்சித்தலைவர் அளிக்கும் படிவம் ஏ, பி இணைக்கவில்லை என்றும் தள்ளுபடி செய்தார்கள்.

பிறகு எப்படி மீண்டும் மறுபரிசீலனை செய்தார்கள்?

வேறு மாவட்டத்திலிருந்து போட்டியிடுபவர் விஏஓ கடிதம் கொடுக்க வேண்டும், அல்லது அங்குள்ள வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் உள்ள பகுதியை இணைக்க வேண்டும். ஆனால் வழக்கமாக தேர்தல் அலுவலர்கள் விஏஓ கடிதத்தை மட்டுமே பரிசீலித்து பழக்கப்பட்டு விட்டதால் வாக்காளர் பட்டியலை நாங்கள் அளித்ததை எடுக்காமல் தள்ளுபடி செய்தார்கள். பின்னர் நள்ளிரவில் மீண்டும் அழைத்து மனுவை மீண்டும் பரிசீலித்து ஏற்றுக்கொண்டார்கள்.

தேமுதிக வேட்பாளருக்கு முன்மொழிந்த 10 பேரின் வாக்காளர் எண்கள் மாறியிருப்பதை சரிசெய்து ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த தேர்தல் அலுவலர்கள் படிவம் ஏ,பி சமர்ப்பிக்காததால் அவரது மனுவை ஏற்று சுயேச்சை வேட்பாளராக அங்கீகரித்தனர். ஆகவே வேட்புமனுவை மறுபரிசீலனை செய்த முன்னுதாரணம் ஏற்கெனவே உள்ளது.

ஏன் இது போன்ற குளறுபடிகள் வருகின்றன?

இதற்கு தேர்தல் அலுவலர்களும், ஆணையமும்தான் காரணம் என்பேன். மனுதாக்கல் செய்ய ஒரு வேட்பாளர் மனுவைப் பெறும்போதே இன்ன காரணங்களால் வேட்பு மனு நிராகரிக்கப்படும் அதைத் தவிர்க்க வேண்டும் என்று ஒரு பட்டியலை அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு முறையும் மாறிக்கொண்டே இருக்கும். இதில் எண்கள் மாறுவது சகஜம். அதைக் காரணமாக வைத்து வேட்பு மனுவை தள்ளுபடி செய்வது, சின்ன குறைகள் இருக்கும், அதை மனுவை வாங்கும் போதே சுட்டிக்காட்டலாம் ஆனால் நிராகரிக்கும் போது அதை சுட்டிக்காட்டி நிராகரிப்பார்கள். இதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும்.

விஷால் விவகாரத்தில் தள்ளுபடி செய்தது சரியா?

சரியல்ல என்றுதான் கூற முடியும். 10 பேரை முன் மொழியும் போது இப்படி நடக்கும் என்று அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர்கள் மிரட்டப்பட்டதால் வாபஸ் பெற்றதாக விஷால் கூறியதை கணக்கில் எடுக்க வேண்டும். அல்லது வேறு 2 பேரை முன் மொழியச் சொல்லிக்கூட மனுவை ஏற்கலாம்.

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

எளிதான விஷயம். முன்மொழிபவர்கள் தேர்தல் அலுவலர் முன்பு கையெழுத்திடும் நடைமுறையைக் கொண்டு வரலாம். இதற்கு நேரம் எல்லாம் பிடிக்காது. இரண்டு மூன்று நாள் வேட்பு மனுத்தாக்கலுக்கு நேரம் அளிக்கும் போது அதைச் செய்யலாம்.

வேட்பாளர்கள் தேர்வில் இத்தனை கடினமாக நடந்துகொள்ளும் தேர்தல் ஆணையம் விஷாலுக்கு உள்ள உரிமையை மறுப்பது சரியல்ல. தேர்தல் ஆணையம் வேட்பாளருக்கு உதவவே உள்ளது. தவறு செய்தாய் என்று அறியாமல் செய்யும் திருத்தக்கூடிய தவறுகளை கூட பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பது சரியல்ல.

வேட்பு மனுவில் இத்தனை கடுமையாக நடந்துகொள்ளும் தேர்தல் ஆணையம்தான் கடந்த முறை என்ன தவறுக்காக தேர்தல் ரத்து செய்யப்பட்டதோ அதே வேட்பாளர் தொடர்ந்து போட்டியிட அனுமதிக்கிறது. இதை மட்டும் உரிமையாகப் பார்க்கும்போது சாதாரண சிறிய தவறுகளை திருத்தி வாங்கி மனுவை ஏற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x