Published : 17 Sep 2023 05:06 AM
Last Updated : 17 Sep 2023 05:06 AM

தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ‘இண்டியா’ கூட்டணியுடன் ஒருங்கிணைந்து குரல்: திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்

தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகள் தொடர்பாக ‘இண்டியா’ கூட்டணியுடன் ஒருங்கிணைந்து, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் குரல் எழுப்ப திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமைஅலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி மற்றும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகள் தொடர்பாக ‘இண்டியா’ கூட்டணியுடன் ஒருங்கிணைந்து, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் குரல் எழுப்புவது. அண்ணா பிறந்த நாளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கிவைத்து, ஒருகோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிப்பது.

காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், மழை குறைபாட்டைக் காரணம் காட்டி, தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக மாநிலம் விடுவிக்காததால் குறுவைப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு சேர வேண்டிய நீரை உடனடியாக விடுவிக்குமாறு கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

தமிழகத்துக்கு பாஜக துரோகம்: மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, தமிழகத்துக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மதுரை எய்ம்ஸ்மருத்துவமனையை முடக்கி வைத்திருப்பதைப்போல, இரண்டாவது கட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிக்கான நிதி ஒதுக்கீட்டையும் வழங்கவில்லை. தமிழகத்தின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்தியஅரசு தடை ஏற்படுத்தி வருகிறது.

பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வால், தமிழகத்தில் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதாவை பேரவையில் இரு முறைநிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்த பிறகும், மத்திய அரசு அந்த மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, தமிழகத்துக்கு பாஜக செய்துவரும் மாபெரும் துரோகம்.

எனவே, நீட் தேர்வு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் தொடர்ந்து குரல் கொடுக்கப்படும். நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவை மத்திய பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை. இதை நிறைவேற்றக் கோரி பலமுறை முதல்வர் வலியுறுத்தியும்கூட, அதன் மீதான விவாதத்துக்குக்கூட பாஜக அரசு தயாராக இல்லை.

எனவே, மகளிருக்கு 33 சதவீதம்பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலுவாககுரல் எழுப்ப இக்கூட்டம் முடிவு செய்துள்ளது.

மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசுத் துறைகளில் முழு இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தனியார் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவேண்டும். பிற்படுத்தப்பட்டோருக் கான க்ரீமிலேயரை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும்.

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி அடிப்படையில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும். இடஒதுக்கீட்டுக்கு உள்ள 50 சதவீத உச்சவரம்பைநீக்கும் மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்திலேயே கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்.

மத்திய பாஜக அரசால் அண்மையில் அறிவித்த விஸ்வகர்மா யோஜானா திட்டம், குலத் தொழிலைஊக்குவிக்கும் வகையிலான நடைமுறைகளை வகுத்துள்ளது. குறிப்பாக, 18 வயது நிறைந்துள்ளவர்களை கல்லூரிக்குச் செல்ல விடாமல், பரம்பரைத் தொழிலையே செய்யத் தூண்டும் குலத்தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சி. இந்த திட்டத்தையும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுகஉறுப்பினர்கள் குரல் எழுப்புவார் கள்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், முற்றிலும் தோல்வியுற்ற மத்திய பாஜக அரசை, நாடாளுமன்றத்தில் ‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து எதிர்கொண்டு, இந்திய ஜனநாயகத்தை காக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x