Published : 09 Sep 2023 08:19 AM
Last Updated : 09 Sep 2023 08:19 AM

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி போலீஸார் இடைக்கால அறிக்கையை நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை அக்டோபர் 13-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

முன்னாள் முதல்வருக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 24-ம் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளைடிக்கப்பட்டன. இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேரை கோத்தகிரி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் தொடர்புடைய கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர்மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. அப்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில், கோவை சிபிசிஐடி கூடுதல் துணை ஆணையர் முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. கனகராஜ் உயிரிழப்பு குறித்து அவருடைய சகோதரர் தனபால் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதுடன், இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பினால், வாக்குமூலம் தரத் தயாராக இருப்பதாக ஊடகங்களில் தெரிவித்தார். இதனடிப்படையில் வரும் 14-ம்தேதி கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு தனபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு உதகையில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி தரப்பில் வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ், கூடுதல் துணைஆணையர் முருகவேல் ஆகியோரும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாளையாறு மனோஜ், ஜம்சீர் அலி ஆகியோரும் ஆஜராகினர். கோடநாடு வழக்கு விசாரணை குறித்து முழு விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படாததால், மாவட்ட நீதிபதி அப்துல்காதர் அதிருப்தி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, சிபிசிஐடி தரப்பில் 4 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், மின்னணு ஆதாரங்கள் குறித்த அறிக்கை இதுவரை கிடைக்காததால், வழக்குவிசாரணைக்கு அரசுத் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, அக்டோபர் 13-ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x