Published : 07 Sep 2023 10:29 AM
Last Updated : 07 Sep 2023 10:29 AM

ஆட்சி மீதுள்ள அதிருப்தியை சனாதனம் மூலம் திமுக திசை திருப்புகிறது: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் குற்றச்சாட்டு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:

‘விடியலை நோக்கி’ என்று மேடைக்கு மேடை தேர்தல் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த திமுக, இன்று தமிழ்நாட்டு மக்களை ‘விரக்தியை நோக்கி’அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. சொத்து வரி, மின் கட்டணம், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு என பலமுனைத் தாக்குதல்களுக்கு பொதுமக்கள் ஆளாகி உள்ளனர்.

திமுகவின் மீது மக்களுக்குள்ள வெறுப்பை, அதிருப்தியை திசை திருப்பும் வகையில், சனாதனம் குறித்து உதயநிதி பேசுகிறார். இல்லாத ஒன்றை ஒழித்துக் கட்டுவதாக பேசுவது கடும் கண்டனத்துக்குரியது. இந்திய அரசமைப்புச் சட்டப்படி அரசாங்கங்கள் நடைபெற்று, அதற்குரிய பலனை மக்கள் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், சனாதனம் குறித்து பேசுவது தேவையற்றது. சமதர்மம் குறித்து பேசும் திமுக, முதலில் திமுகவில் சமதர்மம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

திமுக மீதுள்ள அதிருப்தியை திசைதிருப்ப திமுக முயன்றாலும் அது மக்கள் மத்தியில் நிச்சயம் எடுபடாது. இனிவரும் தேர்தலில்திமுக மண்ணைக் கவ்வுவது நிச்சயம். திமுக ஆட்சி அகற்றப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x