Published : 07 Sep 2023 04:06 AM
Last Updated : 07 Sep 2023 04:06 AM
தென்காசி: தென்காயில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
செந்தில்பாலாஜி தார்மீக ரீதியாக அமைச்சர் பதவி வகிக்க தகுதியற்றவராகிறார். புதிய குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுகின்றன. எனவே அவர் அமைச்சர் பதவியில் தொடர்வது ஜனநாயக மரபாகாது. ஆனால் தமிழக முதல்வர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யாமல் இலாகா இல்லாத அமைச்சராக வைத்துள்ளார்.
இதுபோன்று கடுமையான குற்றச்சாட்டுக்கு ஆளானவரை அமைச்சரவையில் வைத்திருப்பது அழகல்ல என்றும், அது கேலிக் குரியது என்றும் நீதிமன்றம் தனது கருத்தை கூறியுள்ளது. எனவே இனியாவது செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும். தமிழகத்தில் மதுவால் எண்ணற்ற இளைஞர்கள் தங்கள் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கின்றனர்.
வருமானத்தை இழந்து பல குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படுகின்றன. குடும்ப வன்முறை, விபத்துகள் அதிகரிக்கின்றன. கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களும் மதுவால் அதிகரிக்கின்றன. எனவே தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.
சனாதனம் என்பது மனித குலத்தையும் தாண்டி எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தக் கூடியது. சனாதனத்தைப் பற்றி அரிச்சுவடி கூட தெரியாமல் பேசுவது தவறானது, கண்டிக்கத்தக்கது. இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்ற உணர்வோடு பேசுகின்றனர். இதை கைவிடா விட்டால் மிகப் பெரிய விளைவை உருவாக்கும்.
இந்தியா என்பதும், பாரதம் என்பதும் ஒன்றுதான். இண்டியா கூட்டணி பெயரால் பாரத் என பெயர் வைப்பதாகக் கூறப்பட்டாலும் அது பாராட்டத் தக்கதுதான். பாரதம் என முன்பே பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT