Published : 02 Sep 2023 07:30 AM
Last Updated : 02 Sep 2023 07:30 AM
சென்னை: ‘இண்டியா’ கூட்டணிக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. பாஜக ஆட்சியின் ‘கவுன்ட்-டவுன்’ தொடங்கி விட்டது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
‘இண்டியா’ கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் 2 நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப்பின், செய்தியாளர்களிடம் கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசினர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: பாட்னாவில் 19 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அங்கு முதல்கூட்டத்தை நடத்தினோம். அக்கூட்டத்தில் ஒற்றுமையாக இருந்து பாஜக ஆட்சிக்கு ஒரு முடிவு கட்ட முடிவெடுத்தோம். அதைத் தொடர்ந்து, 2-வது கூட்டம் பெங்களூருவில் 26 கட்சிகளுடன் நடத்தப்பட்டது. அதில் கூட்டணிக்கு ‘இண்டியா’ என்ற பெயரைச் சூட்டி, அப்பணியைத் தொடங்கினோம். மூன்றாவதாக, மும்பையில் 28 கட்சிகள் ஒன்றுசேர்ந்து வலிமைமிக்க கூட்டணியாக இதை நிரூபித்துள்ளோம்.
பாஜக கட்சி எப்படிப்பட்ட சர்வாதிகார ஆட்சியை நடத்துகிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். பிரதமர் மோடி எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் அங்கெல்லாம்ஆட்சியின் 9 ஆண்டு சாதனைகளைச் சொல்ல முடியாமல், நாங்கள் அமைத்துள்ள ‘இண்டியா’ கூட்டணி பற்றி பேசி வருகிறார். எனவே, சிறந்த ‘பப்ளிக் ரிலேஷன் ஆபீசராக’ பிரதமரே செயல்பட்டு வருகிறார். அதற்காக கூட்டணி சார்பில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எந்த சாதனைகளும் கிடையாது. நாளுக்குள் நாள் இந்த ஆட்சி ‘அன் பாப்புலராக‘ச் செல்கிறது. ஆனால், ‘இண்டியா’ கூட்டணி ‘பாப்புலராகி’ வருகிறது. இந்திய நாட்டையும் 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுவதற்கான கூட்டணி இது. கட்சிகள் தங்கள் தேவைக்காக உருவாக்கிய கூட்டணியல்ல; மக்கள் விருப்பத்தால் உருவாகிய கூட்டணி இது.
இன்று நடைபெற்ற இந்தக் கூட்டம் திருப்திகரமான கூட்டம் மட்டுமல்ல; திருப்புமுனை கூட்டமாகவும் அமைந்துள்ளது. பொய்களையும், வெறுப்பையும் முதலீடாக வைத்து நடந்துவரும் பாஜக ஆட்சியின் ‘கவுன்ட்-டவுன்’ ஆரம்பமாகி விட் டது.
இதுவரை இந்தியாவில் காணமுடியாத சர்வாதிகார ஆட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அண்மையில் வெளிவந்த ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு தொடர்பாக சிஏஜியின் அறிக்கை குறித்து பிரதமர் வாய்திறந்து பேசவில்லை.
நாடாளுமன்றத்துக்கு மதிப்பில்லை; உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குமதிப்பில்லை; தேர்தல் ஆணையத்துக்கு சுதந்திரம் இல்லை. அமலாக்கப் பிரிவு, சிபிஐ, வருமானவரித் துறை ஆகிய அமைப்புகளை, அரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஏவல் அமைப்புகளாக பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது.
தனிப்பட்ட வெறுப்பு இல்லை: நரேந்திர மோடி என்ற தனிநபரிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை பறிப்பது எங்கள் நோக்கமல்ல. யார் மீதும் தனிப்பட்ட வெறுப்போ வன்மமோ எங்களுக்கு இல்லை. மீண்டும் பாஜகவிடம் ஆட்சியைக் கொடுத்தால் நாம் பார்த்த இந்தியாவே இனி இருக்காது. அதனால் எதிர்க்கிறோம்.
நாங்கள் தனித்தனி கட்சியாக இருந்தாலும் நாட்டைக் காப்பாற்ற ஒன்றாகச் சேர்ந்துள்ளோம். அரசியல் லாபத்துக்காக சேர்ந்துள்ளதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். இந்தியாவின் மாண்பை, மதச்சார்பின்மையை, சமூக நீதியைக் காப்பாற்ற நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். பெரிய போர்க்களத்தில் ஈடுபடப் போகிறாம்.
மிருகபலம் எனப்படும் பெரும்பான்மை இருந்தும், ஏழை மக்களுக்கு மோடி ஆட்சியால் எந்த நன்மையும் இல்லை. பாஜக முன்னெடுக்கும் வெறுப்பு அரசியலாலும், வகுப்பு மோதல்களாலும், தங்களுக்கு வேண்டிய பெரு முதலாளிகளுக்குத் துணைபோகும் செயலாலும் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு குறைந்துள்ளது.
ஒரு நாடு ஒரே வரி; ஒரு நாடு ஒரே மொழி; ஒரு நாடு ஒரே கல்வி; ஒரு நாடு ஒரே தேர்தல்; ஒரு நாடு ஒரே கட்சி என ஒற்றையாட்சியை, ஒற்றைக் கட்சி நாடாக இந்தியாவை மாற்ற நினைக்கும் பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இதுவாகும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ‘இண்டியா’ கூட்டணியில் பங்கேற்றுள்ள கட்சித் தலை வர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நமது கூட்டணியின் பலத்தைவிட, ‘இண்டியா’ என்ற பெயரே பாஜகவுக்கு பயத்தையும், காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது. அதனால்தான், நம் கூட்டணியைக் கொச்சைப்படுத்திப் பேசுவதையே பாஜகவினர் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
பாஜகவைத் தனிமைப்படுத்தும் வகையில், பாஜகவுக்கு எதிரான கட்சிகளை முடிந்தவரை இந்த அணியில் சேர்க்க வேண்டும். இதை மனதில்கொண்டு, அனைத்துத் தலைவர்களும் செயலாற்ற வேண்டும்.
நமது கூட்டணி, இந்தியா முழுமைக்குமான கூட்டணி என்பதால், இதற்கு ஒருங்கிணைப்புக் குழுவையும், குறைந்தபட்ச செயல் திட்டத்தையும் உடனடியாக உருவாக்க வேண்டும். இண்டியா கூட்டணியின் முகமாக அந்த அறிக்கைதான் அமையும்.
இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கோடு செயல்பட வேண்டும். அப்போது பாஜக நிச்சயமாக தோற்கடிக்கப்படும். இந்தக் கூட்டணி வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறவும், அடுத்த ஆண்டு இந்தியாவுக்கான ஒளிமயமான ஆண்டாக அமையவும் இப்போதேஎனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT