Published : 02 Sep 2023 07:40 AM
Last Updated : 02 Sep 2023 07:40 AM

நடிகை விஜயலட்சுமி புகாரில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் - சீமான் கருத்து

திருப்பூர்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நடிகை விஜயலட்சுமி கடந்த 11ஆண்டுகளாக ஒரே குற்றச்சாட்டைக் கூறி வருகிறார்.

ஏற்கனவே 6 பேர் மீதும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதை ஊடகங்களும் ரசிக்கின்றன. அவசியமற்றக் கேள்விகளைத் தவிர்க்க வேண்டும். அவதூறுக்கு அஞ்சுபவன் அற்ப வெற்றியைக்கூட தொடமுடியாது. எந்த ஆட்சியாக இருந்தாலும், புகாரில் உண்மைத் தன்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியமற்றது. தேர்தலுக்குப் பணம்கொடுப்பதை நிறுத்துங்கள். நாட்டின் தேர்தல் செலவு குறையும். உடை, உணவு, பண்பாடு எனநிறைய வேறுபாடு இருக்கும்போது, ஒரே நாடு, ஒரே தேர்தல் எப்படி சாத்தியப்படும்?

காவிரியில் முதலில் தண்ணீர் வரட்டும். கச்சத்தீவு, முல்லை பெரியாறு என பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. காவிரியில் தண்ணீர்விடக் கோரி, தமிழகத்தில் பாஜகபோராடுமா? மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.5,000 கோடி செலவு செய்து,சட்டப்பேரவை உறுப்பினர்களை விலை கொடுத்து பாஜக வாங்கியது. இது ஊழல் இல்லையா? பாஜகவின் ஊழல்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். கர்நாடகாவில் பாஜக தோற்கக் காரணமே ஊழல்தான். திமுகவின் ஊழல் பட்டியல் வெளியிட்டதை வரவேற்கிறோம். அதேபோல, அதிமுகவினர் ஊழல் பட்டியலை பாஜக வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் 50 ஆண்டுகாலமாக மாறி மாறி ஆட்சிபுரிந்தும், குழந்தைகள் இன்னும் பட்டினியுடன் இருப்பதைத்தான் காலை உணவுத் திட்டம் வெளிப்படுத்துகிறது. இவ்வாறு சீமான் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x