Published : 02 Sep 2023 06:01 AM
Last Updated : 02 Sep 2023 06:01 AM

மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அஞ்சல் துறை - டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் புகழாரம்

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சார்பில் நடந்த மேன்மை விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற (இடமிருந்து) சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஜி.நடராஜன், தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை தலைவர் பி.பி.தேவி, தமிழ்நாடு காவல் துறை வீட்டுவசதி வாரிய டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன், தமிழ்நாடு வட்டமுதன்மை அஞ்சல் துறை தலைவர் ஜே.சாருகேசி, பொதுமேலாளர் சித்தரஞ்சன் பிரதான், மதுரை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் வி.எஸ்.ஜெயசங்கர். படம்: ம.பிரபு

சென்னை: தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில், அஞ்சல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள், ஊழியர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான மேன்மை விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

காவல் துறை வீட்டுவசதி வாரிய டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன், விருதுகளை வழங்கினார். அவர் பேசியதாவது: சந்திரயான் திட்டம் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் மாபெரும் சாதனை படைத்துள்ளனர். ஹார்வர்டு பல்கலைக்கழகம், ஐஐடிபோன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் யாரும் இத்திட்டத்தில் பணியாற்றவில்லை.

சந்திரயான் திட்ட இயக்குநர் சாதாரண பள்ளியில் படித்தவர். பகட்டான வாழ்க்கையைவிட கடின உழைப்புதான் ஒருவரை மேன்மையடைய வைக்கிறது. மக்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டதாக அஞ்சல் துறை திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிக அஞ்சல் ஆயுள் காப்பீடுகள் விற்பனை, அதிகசேமிப்பு கணக்கு தொடங்குதல், அஞ்சல் நிலையங்களை சுத்தமாக பராமரித்தல் உள்ளிட்ட 19 பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் 135 பேருக்கு மேன்மை விருதுகளை ஏ.கே.விஸ்வநாதன் வழங்கினார்.

தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் ஜே.சாருகேசி, தமிழ்நாடு வட்டஅஞ்சல் துறைதலைவர் (அஞ்சல், வணிக மேம்பாடு) பி.பி.ஸ்ரீதேவி, சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன், அஞ்சல் துறை இயக்குநர் பி.ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x