Last Updated : 31 Aug, 2023 08:30 AM

 

Published : 31 Aug 2023 08:30 AM
Last Updated : 31 Aug 2023 08:30 AM

ஓடி விளையாடு பாப்பா.. ஒரு ஊசி போட்டுக்க பாப்பா..! - தடுப்பூசி போட வரும் குழந்தைகளை ஈர்க்கும் பூந்தமல்லி சமுதாய நல மையம்

ஊசி போடவந்த குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கம்.

பூந்தமல்லி: தடுப்பூசி செலுத்தும் குழந்தைகள் வலியை மறந்து ஓடியாடி விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்கள், செல்ஃபி கார்னர், உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு காணொலி காட்சிகளை ஒளிப்பரப்பும் தொலைக்காட்சி பெட்டியுடன் கூடிய தடுப்பூசி மையத்தை அமைத்து அசத்தி வருகிறது பூந்தமல்லி நகர்ப்புற சமுதாய நல மையம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் ஒன்று, பூந்தமல்லி. தமிழக தலைநகர் சென்னையை ஒட்டியுள்ள இந்நகராட்சியில் வசிக்கும் சுமார் 75 ஆயிரம் பேரில், கணிசமான ஏழை-எளியோரின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதில் பூந்தமல்லி அரசு மருத்துவமனையும் நகர்ப்புற சமுதாய நல மையமும் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

இதில் பூந்தமல்லி, டிரங்க் சாலையில் செயல்பட்டு வரும் நகர்ப்புற சமுதாய நல மையம், பல வகையான மரங்களால் பசுமை போர்வையை போர்த்திக்கொண்டு, சுமார் 40 ஆயிரம் சதுரடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. பழமையான இந்த சமுதாய நல மையம், 5 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என சுமார் 42 மருத்துவ அதிகாரிகள், பணியாளர்களுடன், ஒருங்கிணைந்த தாய் சேய் நல சேவை பிரிவு, பச்சிளம் குழந்தைகளை நிலைப்படுத்தும் சிகிச்சைப் பிரிவு, தொற்றா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பிரிவு, பொதுமருத்துவப் பிரிவு, சித்த மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், ரத்த சேமிப்பு மையம், எக்ஸ்ரே பிரிவு, பால்வினை நோய்களை தடுப்பதற்கான ஆலோசனை மையம், குடும்ப நல அறுவை சிகிச்சை மையம் உள்ளிட்டவையுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த பூந்தமல்லி நகர்ப்புற சமுதாய நல மையத்தில் தடுப்பூசி செலுத்த வரும் குழந்தைகளை மகிழ்விக்கும்படி விளையாட்டு உபகரணங்கள் கூடிய தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஊசி குத்திய வலியை மறந்து ஓடியாடி விளையாடி மகிழும்படியும் இந்த மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பூந்தமல்லி சுகாதார நிறுவன துணை இயக்குநர், மருத்துவர் செந்தில்குமார் தெரிவித்ததாவது: பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துறையின் கீழ், பூந்தமல்லி சுகாதார மாவட்டத்தில் செயல்படும் பூந்தமல்லி நகர்ப்புற சமுதாய நல மையம், 24 மணி நேரமும் பிரசவம் பார்ப்பதற்கான வசதி, ரத்த சேகரிப்பு மையம், மருந்தகம் என சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், பூந்தமல்லி நகர்ப்புற சமுதாய நல மையத்தில், நாள்தோறும் மாலை 4.30 மணி முதல், இரவு 8.30 மணிவரை சிறப்பு மருத்துவர்கள் மூலம் இதயநோய், கண், பல் மற்றும் தோல் நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் மகப்பேறு சிறப்பு சிகிச்சை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் மற்றும் ரத்த பரிசோதனைகள் செய்யப்படுவதோடு, யோகா மற்றும் உடற்பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. ஆகவே, இந்த நகர்ப்புற சமுதாய நல மையத்தில் நாள்தோறும் சுமார் 300 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், பூந்தமல்லி நகர்ப்புற சமுதாய நல மையத்தில் மாதந்தோறும் 30 பேர் முதல், 40 பேர் வரை பிரசவம் முடிந்து நலமுடன் வீடு திரும்புகின்றனர்; அவ்வாறு வீடு திரும்பும் ஒவ்வொரு தாய், சேய் கைகளால் நகர்ப்புற சமுதாய நல மைய வளாகத்தில் மரக்கன்றுகள், நடப்பட்டு, பசுமை போர்வை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

மாதந்தோறும் சுமார் 30 பேர் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்புகின்றனர். அதேபோல் மாதந்தோறும் 400 கர்ப்பிணிகள், இந்த நகர்ப்புற சமுதாய நல மையத்தில் சிகிச்சை பெறுகின்றனர். இப்படி, பிரசவம், குடும்ப நல அறுவை சிகிச்சை, குழந்தைகள் நல தடுப்பூசி செலுத்துதல், தொற்றா நோய் கண்டறிதல் உள்ளிட்டவைகளை சிறப்பாக மேற்கொள்வதில், கடந்த ஓராண்டாக பூந்தமல்லி நகர்ப்புற சமுதாய நல மையம், தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதலிடம் வகித்து வருகிறது.

இந்நிலையில், இந்த நகர்ப்புற சமுதாய நல மையத்தில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு, போலியோ, மஞ்சள்காமாலை, காசநோய், தட்டம்மை உள்ளிட்ட 12 நோய்களை தடுக்க 11 வகையான தடுப்பூசிகள் பிறந்த குழந்தைகள் முதல் 16 வயது வரையான குழந்தைகளுக்கு புதன்கிழமைதோறும் செலுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு தடுப்பூசி செலுத்தப்படும் குழந்தைகள், தடுப்பூசியால் பாதிப்பு ஏதும் உள்ளதா என்பதை அறிய சுமார் அரை மணி நேரம் கண்காணிக்கப்படுகிறார்கள்.

அவ்வாறு கண்காணிக்கப்படும் குழந்தைகள், தடுப்பூசி செலுத்தியதால் ஏற்படும் வலியை மறந்து ஓடியாடி விளையாடி மகிழ, செயற்கையான விளையாட்டு திடல் அமைத்து, அதில் கரடி பொம்மை, கார் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய முன் மாதிரி தடுப்பூசி மையத்தை அமைத்துள்ளோம். ஆகவே, இந்த தடுப்பூசி மையத்துக்கு வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் குழந்தைகள் விளையாடி மகிழ்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், இந்த தடுப்பூசி மையத்தில்,’ எனக்கு தடுப்பூசி போட்டாச்சு’ என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் கூடிய செல்ஃபி கார்னர், பெற்றோருக்கு பயனளிக்கும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் நலம் 326 யு டியூப் சேனல் மூலம் உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு காணொலி காட்சிகளை ஒளிப்பரப்பும் தொலைக்காட்சி பெட்டி, குழந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பூசிகள் விபரங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இதனால், இந்த முன்மாதிரி தடுப்பூசி மையம் குழந்தைகள் மற்றும் பெற்றோரை மகிழ்விக்கக் கூடியதாகவும், விழிப்புணர்வு அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x