Last Updated : 24 Aug, 2023 08:30 AM

 

Published : 24 Aug 2023 08:30 AM
Last Updated : 24 Aug 2023 08:30 AM

ஈசிஆருக்கும் ஓஎம்ஆருக்கும் வாய்க்கா தகராறா? - விரிவாக்கப்படாத பக்கிங்காம் தரைப்பாலம்

சென்னை: கிழக்கு கடற்கரைச் சாலையையும், பழைய மகாபலிபுரம் சாலையையும் இணைக்கும் தரைப்பாலத்தை இருவழிப் பாதையாகவோ அல்லது மேம்பாலமாகவோ கட்டவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சென்னையின் மிக முக்கியமான விஐபி சாலைகள் என்றால் அது ஈசிஆர் (கிழக்கு கடற்கரைச் சாலை) மற்றும் ஓஎம்ஆர் (பழைய மகாபலிபுரம் சாலை) எனப்படும் ராஜீவ்காந்தி சாலைகள் தான். ஈசிஆர் சாலையில் பொழுதுபோக்கு பூங்காக்களும், ஓஎம்ஆர் சாலையில் ஐ.டி. நிறுவனங்களும் அதிகளவில் உள்ளன. கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக இந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. ஆனால், இரண்டு சாலைகளையும் இணைக்கும் வகையிலான சாலைகள் மிகக்குறைவு. இரண்டு சாலைகளுக்கும் இடையில் பக்கிங்காம் கால்வாய் செல்வதால், அதனை கடக்கும் வகையில் திருவான்மியூர், சோழிங்கநல்லூர் என இரண்டு இடங்களில் பாலங்களுடன், இணைப்பு சாலைகள் உள்ளன. இந்த இணைப்பு சாலைகளை அடைய பல கிமீ தூரம் சுற்ற வேண்டியுள்ளது.

இடையில் சில இடங்களில் இணைப்புசாலைகள் இருந்தாலும், அவற்றில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. அந்த சிறிய இணைப்பு சாலைகளில் ஒன்றுதான் ஈசிஆரில் உள்ள நீலாங்கரை மற்றும் ஓஎம்ஆரில் உள்ள துரைப்பாக்கத்தையும் இணைக்கும் வகையில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கில் அமைந்துள்ள பாண்டியன் சாலை.

இந்த, பாண்டியன் சாலை வழியாக 2 கிலோ மீட்டர் தூரத்தில் ஓஎம்ஆரில் உள்ள துரைப்பாக்கம் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சென்றடையலாம். இல்லை என்றால் பாலவாக்கம், கொட்டிவாக்கம், திருவான்மியூர், அங்கிருந்து மீண்டும் இடதுபுறம் திரும்பி கொட்டிவாக்கம், கந்தன் சாவடி, பெருங்குடி அடைந்து துரைப்பாக்கத்தை சென்றடைய வேண்டும்.

திருவான்மியூர், சோழிங்கநல்லூர் தவிர்த்து அதிகளவில் மக்கள் பயன்படுத்தும் இந்த தரைப்பாலம் மிகவும்குறுகியதாக உள்ளது. அதாவது இருவழியாக இல்லாமல் ஒருவழிச்சாலையாகவே பல ஆண்டுகளாக உள்ளது.

இதனால், ஒருபுறத்திலிருந்து வாகனம்சென்றால் மற்றொரு புறத்தில் வாகனங்கள் அணிவகுத்து காத்து நிற்கும் நிலை உள்ளது. இதனால் தினமும் கூலித் தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பினரும் ஒருசேர பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, நீலாங்கரை மற்றும் துரைப்பாக்கத்தை இணைக்கும் தரைப்பாலத்தை மேம்பாலமாக உயர்த்துவதோடு அதில் இருவழிப் பாதையாக வாகனங்கள் செல்லும் வகையில் உயர்த்தி கட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

பழனி

இதுகுறித்து நீலாங்கரையைச் சேர்ந்த பழனி கூறும்போது, ‘நீலாங்கரை- துரைபாக்கத்தை இணைக்கும் தரைப்பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த இணைப்பு சாலை வழியாக வாகனங்கள் சீரான வேகத்தில் செல்லும் வகையில் சாலைகள் இல்லை. உருக்குலைந்துள்ளன.

சாலைப் பள்ளம், ஆக்கிரமிப்புகள், சாலையை ஆக்கிரமித்து குப்பை தொட்டி, சிதிதடைந்த வேகத்தடை, சாலையில் குறுக்கே நீளமாக தோண்டப்பட்ட பள்ளம் என வாகனங்கள் சீரான வேகத்தில் செல்ல முடிவதில்லை. மேலும், தரைப்பாலமும் விரிவானதாக இல்லை. ஒருபுறத்திலிருந்து செல்லும் வாகனத்துக்காக மறுபுறத்திலிருந்து வரும் வாகனங்கள் நீண்டவரிசையில் தினமும் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.

வேலு

துரைப்பாக்கத்தைச் சேர்ந்த வேலு கூறும்போது, ‘ஈசிஆர்–ஓஎம்ஆரை இணைக்கும் பக்கிங்காம் கால்வாயில் தரைப்பாலம் வழியாக வாகனங்கள் தொடர்ச்சியாக செல்வதால் பொது மக்கள் பாலத்தை கடக்க பாலத்தின் இரண்டு புறமும் குறுகலான தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சோழிங்கநல்லூரிலிருந்து திருவான்மியூர் வரை 4 தரைப்பாலங்கள் உள்ளன.

அதிக நெரிசல் காரணமாக இப்பாலங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் பொது மக்கள் செல்லும் பகுதியை ஆக்கிரமித்து செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதற்கு பாலங்களை விரிவாக்கம் செய்ய வேண்டும். அல்லது பெரிய அளவில் மேம்பாலங்களை கட்டுவதே நிரந்தர தீர்வாக இருக்கும்’ என்றார்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘நீலாங்கரை–துரைபாக்கத்தை இணைக்கும் தரைப்பாலத்தை விரிவுபடுத்துவது தொடர்பாகதற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பாண்டியன் சாலை போல் மற்றொரு சாலை (மஜீத் தெரு) வழியாக செல்லும் தரைப்பாலம் குறித்தும் கவனத்தில் கொண்டுள்ளோம். அது தொடர்பாக மக்கள்தெரிவிக்கும் கருத்துகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x