Published : 24 Aug 2023 01:06 PM
Last Updated : 24 Aug 2023 01:06 PM

சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி ஒளிப்பதிவாளரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு

நெல்லை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி ஒளிப்பதிவாளர் சங்கர்

சென்னை: திருநெல்வேலி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த புதிய தலைமுறை சேனலின் செய்தி ஒளிப்பதிவாளரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே புதன்கிழமை (ஆக.23) இரவு நடந்த சாலைவிபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ஆரைகுளம், முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் (வயது 33) என்பவர், சந்திரயான் விண்கலம் தொடர்பான செய்திக்காக திருவனந்தபுரம் சென்று திருநெல்வேலி திரும்பும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

இளம் வயதில் உயிரிழந்த தொலைகாட்சி ஒளிப்பதிவாளர் சங்கரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் நெல்லை பகுதியின் செய்தி ஒளிப்பதிவாளர் சங்கர் (வயது 33), சாலை விபத்தில் உயிரிழந்தார். சந்திரயான்-3 தொடர்பான செய்தி சேகரிப்பு பணிக்காக நேற்று காலை நெல்லையில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு காரில் சென்றுள்ளனர் புதிய தலைமுறை செய்தி குழுவினர். பணியை முடித்துக் கொண்டு இரவு நெல்லை திரும்பும் போது நாங்குநேரி டோல்கேட் அருகில் அவர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கி உள்ளது. இந்த விபத்தில் செய்தி ஒளிப்பதிவாளர் சங்கர் உயிரிழந்தார்.

அவருடன் காரில் பயணித்த செய்தியாளர் நாகராஜன் உட்பட மூவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். உயிரிழந்த சங்கருக்கு மனைவியும், ஏழு வயதில் மகனும் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x