Published : 23 Aug 2023 10:15 AM
Last Updated : 23 Aug 2023 10:15 AM

‘கைது’ செய்த ஆட்டோக்களை ‘ரிலீஸ்’ பண்ணலாமே! - வெயில், மழையில் வீணாகும் பரிதாபம்

காஞ்சிபுரம் அண்ணா காவல் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பறிமுதல் ஆட்டோக்கள்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் போக்குவரத்து துறையால் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள் மாதக் கணக்கில் வெயிலிலும், மழையிலும் நிற்பதால் வீணாகி வருகின்றன. ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கருதி, சிறு தவறுகளுக்காக பிடிக்கப்பட்ட ஆட்டோக்களை மீண்டும் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

‘ஆயிரம் கோயில்களின் நகரம்’ என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், காமாட்சி அம்மன் கோயில் என ஏராளமான கோயில்களும், சங்கர மடம், மஹா பெரியவர் மணி மண்டபம் என ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த பல தலங்களும் உள்ளன. திரும்பிய பக்கமெல்லாம் பட்டுச் சேலை கடைகளும் உள்ளன.

ஆன்மிகத்துக்கும், பட்டுக்கும் பெயர்பெற்ற இடம் என்பதால், வெளியூர், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாட்டினரும் அதிக அளவில் வந்து செல்லும் இடமாக உள்ளது காஞ்சிபுரம். வசதியான, எளிய வாகனம் என்பதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆட்டோட்களை அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆட்டோக்களுக்கான தேவை அதிகரித்ததால், அனுமதி பெறாத ஆட்டோக்கள், முறையான ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்களும் இயங்கத் தொடங்கின. இது மட்டுமின்றி, சிலர் திடீரென ஆட்டோ தொழிலில் இறங்கி, போலி பட்டுச் சேலை விற்பவர்களின் முகவர்களாகவே மாறினர்.

சுற்றுலா பயணிகள் பேருந்து நிலையத்தில் இறங்கி, ‘‘பட்டுச் சேலை கடைக்கு போகணும்’’ என்று கூறினால் போதும், போலி பட்டுச் சேலைகள் தயாரித்து விற்பனை செய்யும் கடைகளுக்கு இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அழைத்துச் சென்றுவிடுவார்கள். சுற்றுலா பயணிகள் சந்தேகப்பட்டு கேட்டால், ‘‘இதுதான் ஒரிஜினல் பட்டுச் சேலை உற்பத்திக் கூடம். இங்கிருந்துதான் எல்லா கடைகளுக்கும் பட்டுச் சேலைகள் சப்ளை செய்யப்படுகின்றன’’ என்று பொய்களை அள்ளிவிடுவார்கள்.

அப்படியும் சமாதானம் ஆகாத சுற்றுலா பயணிகளை, அநாகரிகமாக பேசுவது, ஆட்டோவுக்கான கட்டணத்தை வாங்கிக் கொண்டு அவர்களை அங்கேயே விட்டுச் செல்வது, சில்லறை இல்லை என வேண்டுமென்றே தகராறு செய்து, அழைத்து வந்த கடைக்குள் வலுக்கட்டாயமாக அனுப்ப முயற்சிப்பது என்று பல்வேறு அத்துமீறல்களும் நடைபெற தொடங்கின. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட சமூக விரோதிகள், அனுமதி இல்லாத ஆட்டோக்களையே அதிகம் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஆட்டோக்களின் ஆவணங்களை சரிபார்க்க காஞ்சிபுரத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காவல் மைதானத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. பல ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டன. இவ்வாறு நிறுத்தப்பட்ட பல ஆட்டோக்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளன. மாதக் கணக்கில் வெயிலிலும், மழையிலும் நிற்பதால்,

ஆட்டோக்கள் மெல்ல துருப்பிடித்து, வீணாகி வருகின்றன. இதேபோல, அதிக வேகத்தில் செல்வது, அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை உபயோகப்படுத்தியது என சிறு சிறு குற்றங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்களும் இங்கு நிறுத்தப்பட்டுள்ளன. ஆட்டோ தொழிலை மட்டுமே நம்பியுள்ள ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், அதுபோன்ற ஆட்டோக்களை விடுவித்து அவர்கள் மீண்டும் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேகநாதன்

இதுகுறித்து சமூக ஆர்வலர் மேகநாதன் கூறியபோது, ‘‘ஆட்டோக்களை பிடிக்கும்போது, அவர்கள் கட்ட முடியாத அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் பலர் ‘எஃப்.சி’ (தகுதி சான்று) பெறவில்லை. இப்போது அதற்கெல்லாம் சேர்ந்து கட்டணம் கட்டச் சொல்கின்றனர்.

ஆட்டோக்களே இயக்கப்படாத காலத்துக்கு அவர்கள் எவ்வாறு கட்டணம் செலுத்துவார்கள். முறையான ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்களை பிடித்து வைப்பது நியாயம். ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கருதி, சிறு சிறு குற்றங்களுக்காக பிடிக்கப்பட்ட ஆட்டோக்களை விடுவிக்க வேண்டும்’’ என்றார்.

இதுபற்றி காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது, ‘‘எந்த வாகனத்தையும் நாங்கள் தடுத்து நிறுத்தி வைக்கவில்லை. தவறுகளுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதை செலுத்தி, உரிய ஆவணங்களை காட்டிவிட்டு ஆட்டோக்களை தாராளமாக எடுத்துச் செல்லலாம். ஆட்டோ ஓட்டுநர்கள்தான் வரவில்லை. ஓராண்டுக்கும் மேலாக ஆட்டோக்களை எடுக்காவிட்டால், அவற்றை ஏலம் விட போக்குவரத்து துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x