Published : 23 Aug 2023 12:45 PM
Last Updated : 23 Aug 2023 12:45 PM

“புற்றுநோயிலிருந்து மீண்டு வருகிறேன்” - உயிரிழந்ததாக வதந்தி பரவிய நிலையில் ஹீத் ஸ்ட்ரீக் விளக்கம்

ஹீத் ஸ்ட்ரீக்

ஹராரே: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக், புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்த சூழலில் அது வதந்தி என்றும், தான் உயிருடன் இருப்பதாகவும் அவரே விளக்கம் தந்துள்ளார்.

49 வயதான அவர், ஜிம்பாப்வே அணிக்காக 1993 முதல் 2005 வரையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அந்த அணியின் கேப்டனாகவும், பயிற்சியாளராகவும் பணியாற்றி உள்ளார். ஜிம்பாப்வே அணிக்காக விளையாடிய வீரர்களில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரராகவும் திகழ்கிறார்.

இந்நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், அது குறித்த செய்தியை அவர் அறிந்ததும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் இல்லாத காரணத்தால் உடனடியாக அது வதந்தி என உலகுக்குச் சொல்லவும் முடியாமல் தவித்துள்ளார்.

“இதுபோன்ற வதந்திகளை பரப்புவதற்கு முன்பு மக்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நான் இப்போது நலமுடன் இருக்கிறேன். புற்றுநோயில் இருந்து மீண்டு வருகிறேன். நான் இப்போது வீட்டில் உள்ளேன். சிகிச்சை முறை கொஞ்சம் வலி தருகிறது.

நான் உயிரிழந்துவிட்டதாக யாரோ ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதையடுத்து மக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அது சரியான தகவல் அல்ல. நான் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறேன்” என வேதனையுடன் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் முதல் அவர் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக, அவரது மறைவு செய்தி குறித்த பதிவை முன்னாள் ஜிம்பாப்வே வீரர் ஹென்றி ஒலாங்கா பதிவிட்டார். பின்னர் அவர் உயிருடன் இருப்பதை அறிந்து தனது முந்தைய பதிவுக்கு ஒலாங்கா மன்னிப்பு கோரினார்.

— Henry Olonga (@henryolonga) August 23, 2023

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x