Published : 19 Aug 2023 04:12 AM
Last Updated : 19 Aug 2023 04:12 AM
மதுரை: மதுரை வலையங்குளத்தில் நாளை (ஆக. 20) நடைபெற உள்ள அதிமுக மாநில மாநாட்டில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் வாகனங்களில் எந்தெந்த வழியாக வரலாம் என்பது குறித்த விவரங்களை போக்குவரத்து காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி தென் மாவட்டங்களில் இருந்து தொண்டர்களை அழைத்து வரும் வாகனங்கள் காரியாபட்டி, வலையங்குளம் வழியாகவும், திருமங்கலம், கப்பலூர் விமான நிலைய சுற்றுச்சாலை வழியாகவும் மாநாட்டு திடலை வந்தடைய வேண்டும்.
வட மாவட்டங்களில் இருந்து திண்டுக்கல், வாடிப்பட்டி வழியாக வரும் வாகனங்கள், நாகமலை புதுக்கோட்டை, தோப்பூர், கப்பலூர், விமான நிலைய சுற்றுச்சாலை வழியாக மாநாட்டு திடலுக்கு வர வேண்டும். வட மாவட்டங்களில் இருந்து மேலூர், ஒத்தக்கடை வழியாக வரும் வாகனங்கள், விரகனூர் சந்திப்பு, மண்டேலா நகர் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.
போக்குவரத்து மாற்றம்: நாளை காலை முதலே வெளியூர் வாகனங்கள் குவிய தொடங்கும் என்பதால், அதற்கேற்ப மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், மதுரை நகருக்குள் வர கப்பலூர், திருப்பரங்குன்றம் வழிப் பாதையில் வரலாம். மேலூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், மதுரை நகருக்குள் வந்து கப்பலூர் வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லலாம்.
காரியாபட்டியிலிருந்து மதுரைக்கு வரும் வாகனங்கள், நரிக்குடி மற்றும் திருமங்கலம் வழியாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும். வலையங்குளம் முதல் விரகனூர், கப்பலூர் வரையுள்ள சுற்றுச் சாலையை பொதுமக்களின் வாகனங்கள் எளிதாக பயன்படுத்த முடியாத சூழல் இருக்கும் என்பதால், அந்த வாகனங்கள் உரிய மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்துச் செல்ல வேண்டும் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT