Published : 16 Aug 2023 05:37 AM
Last Updated : 16 Aug 2023 05:37 AM

ஏல சொத்துகளை பதிவு செய்ய 11 சதவீத கட்டணம் | அரசாணையை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது - உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஏலம் மூலம் வாங்கிய சொத்துகளின் விற்பனை சான்றிதழ்களை பதிவு செய்ய 11 சதவீத கட்டணம் வசூலிக்க வகை செய்யும் அரசாணையை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கிக் கடன் மூலம் வாங்கிய சொத்துகளின் உரிமையாளர்கள், வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாத சூழலில், அந்த சொத்துகளை வங்கி ஏலம் மூலம் வாங்கியவர்கள், அதற்காக வழங்கப்பட்ட விற்பனை சான்றிதழ்களை பத்திரப்பதிவு செய்ய முத்திரைத்தாள் கட்டணமாக 7 சதவீதமும், பதிவுக்கட்டணமாக 4 சதவீதமும் என மொத்தம் 11 சதவீத கட்டணம் வசூலிக்க பத்திரப் பதிவுத்துறை ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

ஆனால் ஏலம் மூலமாக எடுக்கப்படும் சொத்துகளை பதிவு செய்ய முத்திரைக் கட்டணம் செலுத்த தேவையில்லை என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளதால், தமிழக அரசின் கட்டண விகிதங்களை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதேபோல், பல இடங்களில் ஏலத்தில் எடுக்கப்படும் சொத்தை பதிவு செய்ய பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாகவும், சில சார்-பதிவாளர்கள் பதிவு செய்து கொடுக்க மறுப்பு தெரிவித்து வருவதாகவும் கூறி ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பாக நடந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘‘ஏலம் மூலமாக வாங்கிய சொத்துகளுக்கான விற்பனை சான்றிதழ்களை பதிவு செய்ய முத்திரைத் தாள் கட்டணம் செலுத்தும்படி நிர்பந்திக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இந்த சொத்துகளை பதிவு செய்து கொடுப்பதற்கான கட்டணமாக 11 சதவீதம் வசூலிக்க அரசு முடிவெடுத்து கடந்த மார்ச் 23 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, ‘‘ஏல சொத்துகளுக்கு நேரடியாக முத்திரைக் கட்டணம், பதிவு கட்டணங்களை வசூலிக்க முடியாது என்பதால் தமிழக அரசு மறைமுகமாக விற்பனை சான்றிதழ்களை பதிவுசெய்து கொடுப்பதற்கான கட்டணமாக 11 சதவீதம் வசூலிக்கும் வகையில் அரசாணை பிறப்பித்துள்ளது.

மனுதாரர்கள் யாரும் தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து வழக்கு தொடரவில்லை என்பதால் அந்த விவகாரத்துக்குள் செல்லவில்லை. அதேநேரம் 2023 மார்ச் 23 அன்று பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது.

எனவே வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்களின் விற்பனை சான்றிதழ்களை உடனடியாக பதிவுசெய்து கொடுக்க வேண்டும். அதற்கு சமீபத்திய அரசாணைப்படி கட்டணம் செலுத்த வேண்டுமென நிர்பந்திக்கக் கூடாது. அத்துடன் முத்திரைத்தாள் கட்டணம் கூடுதலாக வசூலித்து இருந்தால் 6 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x