Published : 16 Aug 2023 05:31 AM
Last Updated : 16 Aug 2023 05:31 AM

அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது - மருத்துவ மேற்படிப்பு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு மற்றும் ஊக்க மதிப்பெண் வழங்கும் தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ், எம்டிஎஸ்போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் மொத்தமுள்ள இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

மாநில அரசுக்குள்ள 50 சதவீத இடங்களில், 50 சதவீத இடங்கள் உள் இடஒதுக்கீடாக அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. எஞ்சிய இடங்கள் திறந்தவெளி ஒதுக்கீட்டில் உள்ளன. இந்த இடங்களில் தனியார் மருத்துவர்களுடன் போட்டியிடும் அரசு மருத்துவர்கள் தொலைதூர, கடினமான மற்றும் மலைப்பகுதி கிராமங்களில் பணியாற்றினால் அவர்களுக்கு அதிகபட்சமாக 30 சதவீத ஊக்க மதிப்பெண் வழங்கும் வகையில் கடந்த 2020-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் இரட்டை சலுகையாக 50 சதவீத இடஒதுக்கீடு மற்றும் ஊக்கமதிப்பெண் வழங்குவது சட்டவிரோதமானது என்றும், இதனால் தங்களுக்கான வாய்ப்பு பறிக்கப்படுகிறது என்றும் கூறி தனியார் மருத்துவர்கள் பலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் சுக்ரித் பார்த்தசாரதியும், தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், மாநில அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆகியோரும், அரசு மருத்துவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்துள்ள தீர்ப்பில், ‘‘அரசு மருத்துவர்களுக்கு வேறு எந்த மாநிலத்திலும் 30 சதவீத ஊக்க மதிப்பெண்கள் வழங்காத நிலையில், தமிழகத்தில் மட்டும் வழங்கப்படுவதால் அரசின் கொள்கை முடிவு சட்டவிரோதமானது மட்டுமல்ல; அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது என்ற மனுதாரர்கள் தரப்பு வாதம் ஏற்புடையதல்ல.

அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதேபோல தமிழகத்தில் 2 ஆயிரத்து 266 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 330 அரசு மருத்துவமனைகளும் உள்ளன. மருத்துவ சேவை எங்கு அதிகமாக தேவையோ அங்கு பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்குவதில் எந்த தவறும் இல்லை.

பணிக்காலம் முழுவதும்...: ஏனெனில் அரசு மருத்துவர்கள் தங்களது பணிக்காலம் முழுவதையும் அரசு மருத்துவமனைகளிலேயே செலவிடுகின்றனர். அத்துடன் தொலைதூர, கடினமான மற்றும் மலைப்பகுதி கிராமங்களில் அரசு மருத்துவர்கள் பணியாற்றுவதை ஊக்கப்படுத்தும் வகையிலேயே இந்த ஊக்க மதிப்பெண் வழங்கப்படுகிறது.

எனவே தமிழக அரசின் இந்த கொள்கை முடிவில் தலையிட முடியாது’’ எனக் கூறி வழக்குகளை முடித்து வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x