Published : 13 Aug 2023 08:14 AM
Last Updated : 13 Aug 2023 08:14 AM

அமைச்சர் அன்பில் மகேஸுக்கு நெஞ்சு வலி - பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதி

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் பெங்களூருவுக்கு புறப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்.

தருமபுரி/பெங்களூரு: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸுக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துகொண்டு கிருஷ்ணகிரியில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்றார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை நெருங்கியபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக காரிமங்கலத்தில் ராமசாமி கோயில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தினர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதில் அஜீரணம் மற்றும் வாயு பிரச்சினை இருந்தது தெரியவந்தது.

அதற்காக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பிய அமைச்சர், மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி பெங்களூரு இருதயவியல் சிறப்பு மருத்துவமனைக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.

அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் அவரது இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து இருதய சிகிச்சை மருத்துவர்கள் அன்பில் மகேஸுக்கு ஆஞ்சியோகிராம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்த பெங்களூரு, ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் அங்கு குவிந்தனர்.

முன்னதாக காரிமங்கலம் மருத்துவமனைக்கு அமைச்சர்கள் சக்கரபாணி, சிவசங்கர், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் வந்தனர்.

இதுகுறித்து, அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறும்போது, காரில் வரும்போது, மிளகுப்பொடி தூவப்பட்ட ஆப்பிள் துண்டுகள் சிலவற்றை அமைச்சர் சாப்பிட்டார். அதைத்தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டதாக உணர்ந்தார். பைசுஅள்ளி பகுதிக்கு வந்தபோது வயிற்று வலி ஏற்பட்டது. காரிமங்கலம் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர் சில மருந்துகளை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, ஆழ்ந்து உறங்கத் தொடங்கிய அமைச்சர் சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் விழித்தார் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x