Published : 24 Nov 2017 09:35 AM
Last Updated : 24 Nov 2017 09:35 AM

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு‘இரட்டை இலை’ வெற்றி சமர்ப்பணம்: ஓ.பன்னீர்செல்வம் உற்சாகம்

‘இரட்டை இலை’ வெற்றியை எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அர்ப்பணிப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களே தலைமைக் கழக நிர்வாகிகளாக தொடர்ந்து இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

முதல்வர் பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.

இதுகுறித்த அறிவிப்பு வெளியானதும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நிர்வாகிகள் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு செய்தியாளர்களிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:

எம்ஜிஆர் 1972-ல் அதிமுகவை தொடங்கியபோது தொண்டர்களின் இயக்கம், மக்களின் ஆட்சி என்று பிரகடனப்படுத்தினார். அவருக்குப் பிறகு, 27 ஆண்டுகளாக தொண்டர்களின் இயக்கமாகவே நடத்தினார் ஜெயலலிதா. இரு பெரும் தலைவர்களின் எண்ணத்துக்கு மாறாகவும், ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பத்துக்கு எதிராகவும் பல சம்பவங்கள் நடந்தன. பல சோதனைகளையும் சந்தித்தோம்.

தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றியை எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அர்ப்பணிக்கிறோம். அந்த இருவரது ஆன்மாக்கள்தான் இந்த வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளன.

தலைமைக் கழக நிர்வாகிகள்

கட்சியின் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் சேர்ந்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, உரிய ஆதாரத்துடன் இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டோம். அதனால்தான் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆட்சியை கவிழ்க்க சதி

இதில் எங்களுக்கு முன்னாலும், பின்னாலும் யாரும் இல்லை. கட்சியை வழிநடத்தும் பொறுப்பு, அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பதை தீர்மானிப்பது தேர்தல் ஆணையமே தவிர, டிடிவி தினகரன் இல்லை. அவர் அதிமுக ஆட்சியை கவிழ்க்க சதி செய்தவர்.

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஒன்றிணைந்து கட்சியை வெற்றிப் பாதையில் நடத்திச் செல்லும். அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே தலைமைக் கழக நிர்வாகிகளாக தொடர்ந்து நீடிப்பார்கள்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x