Published : 10 Aug 2023 06:51 AM
Last Updated : 10 Aug 2023 06:51 AM
திருவாரூர்: காவிரி நீரை பெற்றுத் தர வலியுறுத்தி, ஆக.12-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திருவாரூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் பழனிச்சாமி, திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ கே.மாரிமுத்து, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர்கள் திருவாரூர் வை. செல்வராஜ், தஞ்சை தெற்கு முத்து உத்திராபதி, தஞ்சை வடக்கு மு.அ.பாரதி, மயிலாடுதுறை வீரராஜ் மற்றும் நாகை மாவட்ட துணைச் செயலாளர் பாஸ்கர் ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, அவர்கள் கூறியது: திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது காவிரியில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் முறையாக கிடைக்காததால், நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
எனவே, தமிழகத்துக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காவிரியில் இருந்து கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசிடம் இருந்து உடனடியாக மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும். தண்ணீர் இன்றி கருகிய நெல் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். குறுவை நெற்பயிர்களுக்கு உடனடியாக பயிர்க் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.12-ம் தேதி திருவாரூர் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட உள்ளோம் என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT