Published : 24 Nov 2017 10:00 AM
Last Updated : 24 Nov 2017 10:00 AM

மாணவி தற்கொலையால் விடுதிக்கு தீவைப்பு: சத்யபாமா பல்கலை.க்கு ஜனவரி 1 வரை விடுமுறை - ‘இரட்டையர்களில் ஒருவரை இழந்துவிட்டேன்’ என்று தந்தை கண்ணீர்

சத்யபாமா பல்கலைக்கழக மாணவி விடுதியில் தற்கொலை செய்துகொண்டதால், விடுதிக்கு மாணவர்கள் தீ வைத்தனர். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்கு ஜன வரி 1-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள் ளது.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் ராகமோனிகா (18). இவர், சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் நடந்த செமஸ்டர் தேர்வின்போது, அருகே இருந்த மாணவியின் விடைத்தாளை ராகமோனிகா பார்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தேர்வு அறையில் இருந்து ராகமோனிகா வெளியேற்றப்பட்டுள்ளார். விடுதி அறைக்குச் சென்ற ராகமோனிகா, அதே கல்லூரியில் தன்னுடன் படிக்கும் சகோதரர் ராகேஷ் மற்றும் தோழிகளுக்கு ‘உங்களை விட்டுப் பிரிகிறேன்’ என்று வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிவிட்டு, தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தேர்வு அறைக்குள் செல் போன் அனுமதி இல்லை என்பதால், தேர்வு முடிந்ததும் செல்போனை பார்த்த ராகேஷ், அதிர்ச்சி அடைந்து, ராகமோனிகாவின் விடுதிக்கு ஓடினார். காவலாளி அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அங்கு சென்றபோது, ராகமோனிகா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் வன்முறையாக மாறியது. பல்கலைக்கழக விடுதிக்கு மாணவர்கள் நேற்று முன்தினம் இரவு தீ வைத்தனர். தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப் பட்டது.

ராகேஷ் கூறும்போது, “நானும், அக்காவும் இரட்டையர்கள். ஒரே வகுப்பில் படித்தோம். வெவ்வேறு அறைகளில் தேர்வு எழுதினோம். தேர்வு முடிந்து செல்போனை பார்த்தபோது அக்கா 3 முறை மெசேஜ் செய்திருப்பதைப் பார்த்து, விடுதிக்கு ஓடினேன். அவர் தற்கொலை செய்துகொள்ளப் போகிறார் என்று எவ்வளவோ கூறியும் காவலாளி உள்ளேவிட மறுத்துவிட்டார். அவர் உடனே அனுமதித்திருந்தால், அக்காவைக் காப்பாற்றி இருப்பேன்” என் றார்.

ராகமோனிகாவின் தந்தை ராஜா, நேற்று காலை சென்னை வந்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மகள் ராகமோனிகா வின் உடலைப் பார்த்து அவர் கதறி அழுதார். ‘‘என் மகள் தவறே செய்திருந்தாலும் அதை எப்படி கண்டிக்க வேண்டும் என்று தெரியவேண்டாமா? அவருக்கு கவுன்சலிங் கொடுத்திருக்கலாமே. இப் போது என் இரட்டைப் பிள்ளைகளில் ஒருவரை இழந்துவிட்டேனே’’ என்று கதறி அழுதார்.

மாணவர்கள் மீது வழக்கு

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 6-ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு, பிறகு விடுமுறை தொடங்க இருந்தது. தற்போதைய அசம்பாவிதம் காரணமாக, ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வு ஜனவரி 2-ம் தேதி முதல் நடைபெறும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதற்கிடையில், விடுதிக்கு தீ வைத்த மாணவர்கள் மீது, பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக செம்மஞ்சேரி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

‘தற்கொலை வேண்டாமே’

உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினைகள்தான் தற்கொலைக்கு முதல் காரணம். படிப்புடன் கூடிய வாழ்க்கைக் கல்வியையும், சின்னச் சின்ன பிரச்சினைகளை சமாளிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். போராடும் குணம், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் 044-24640050 என்ற சிநேகா தொண்டு நிறுவனத்தின் எண்ணை தொடர்புகொண்டு 24 மணி நேரமும் பேசலாம். இது இலவச சேவை. பேசுபவரின் பெயர், விவரங்களைக்கூட தெரிவிக்க அவசியம் இல்லை. முழு ரகசியம் காக்கப்படும் என்கிறது சிநேகா தொண்டு நிறுவனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x